தூக்குப்போட்டு பள்ளி மாணவன் தற்கொலை


தூக்குப்போட்டு பள்ளி மாணவன் தற்கொலை
x
தினத்தந்தி 9 Jan 2023 6:45 PM GMT (Updated: 9 Jan 2023 6:47 PM GMT)

குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றபோது வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்தானா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மங்களூரு:-

நிரந்தர தீர்வு

கர்நாடகத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் காதல் தோல்வி, பெற்றோர் திட்டுவது உள்பட குடும்ப பிரச்சினை காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவாகின. மாணவர்களின் தற்கொலை முடிவுகளுக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்ட்வாலில் நடந்துள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா புனசா கிராமத்தை சேர்த்தவர் ரவிந்திர கவுடா. இவரது மகன் ஹேமந்த் (வயது 13). இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள தனியார் உயர்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது மாணவனுக்கு பள்ளியில் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரவிந்திர கவுடாவின் உறவினர் சபரிமலைக்கு மாலை அணிந்து கோவிலுக்கு புறப்பட இருந்தார்.

தேர்வு உள்ளதாக...

இதற்கான கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரவிந்திர கவுடா தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது தனக்கு தேர்வு இருப்பதால் கோவிலுக்கு வரவில்லை எனவும், வீட்டில் இருந்து படிக்க உள்ளதாகவும் ஹேமந்த் தனது பெற்றோரிடம் கூறி உள்ளான். இதையடுத்து அவனை வீட்டில் விட்டு மற்றவர்கள் கோவிலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிறுவன், கதவை பூட்டிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதற்கிடையே அன்றைய நாள் அவர்கள் உறவினர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீடு பூட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிறுவன் தூக்கில் தொங்கினான்.

போலீஸ் விசாரணை

இதைகண்டு அவனது பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக பண்ட்வால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் சிறுவனின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் எதற்காக தற்கொலை செய்து கொண்டான் என தெரியவில்லை. தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது.


Next Story