கர்நாடகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா பேட்டி


கர்நாடகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா பேட்டி
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 11:25 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பள்ளிக்கூடங்கள் நாளை(புதன்கிழமை) முதல் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா கூறினார்.

சிவமொக்கா-

சித்தராமையா தலைமையிலான புதிய மந்திரிசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரியாக பொறுப்பேற்று இருப்பவர் மது பங்காரப்பா. இவர் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் ஆவார். இவர் நேற்று சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் வருகிற 31-ந் தேதி(நாளை) முதல் தொடங்கும். இன்று(நேற்று), நாளை (இன்று) ஆகிய 2 நாட்களில் பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி நடைபெறும். 31-ந் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். பள்ளிகளில் உள்ள கழிவறைகள், காம்பவுண்டு சுவர், விளையாட்டு மைதானம், நூலகம் என அனைத்து இடங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஆலோசனை கூட்டம்

முதல்நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்க பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இதுபற்றி அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

அந்தந்த பள்ளிகளில், மாணவர்களின் பெற்றோருடன் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி பள்ளிகள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுப்பது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story