அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 'செபி' அமைப்புக்கு ஆகஸ்டு 14 வரை அவகாசம்சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அதானி நிறுவனங்களின் மோசடி தொடர்பான விசாரணையை நடத்துவதற்கு ஆகஸ்டு 14-ந் தேதி வரை செபி அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
புதுடெல்லி, மே.18-
அதானி நிறுவனங்களின் மோசடி தொடர்பான விசாரணையை நடத்துவதற்கு ஆகஸ்டு 14-ந் தேதி வரை செபி அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள், தங்களது பங்கு விலையை மிகைப்படுத்தி விற்பனை செய்து மிகப்பெரிய அளவில் மோசடிகளில் ஈடுபட்டுள்ளன என்று அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலாக (சுமார் ரூ.8 லட்சம் கோடி) வீழ்ந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 4 பொது நல வழக்குகள் தாக்கலாகி உள்ளன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அமர்வில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலாா ஆகியோரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, அதானி குழும நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளை 2 மாதங்களில் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு இந்திய பங்குகள் பரிமாற்ற வாரியத்துக்கு (செபி) சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது
அத்துடன் அதானி நிறுவனங்கள் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்த குழுவில், முன்னாள் நீதிபதிகள் ஓ.பி.பட், ஜே.பி.தேவ் தத் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலகேணி, வங்கியாளர் கே.வி.கேமத், பங்குத்துறை வல்லுனர் சோமசேகரன் சுந்தரேசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவானது பங்குச்சந்தையின் ஒட்டுமொத்த நிலைமையையும் அளவிடும்; பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பங்குச் சந்தைகளுக்கான தற்போதைய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிபுணர்கள் குழு தனது அறிக்கையை சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், அதானி குழும நிறுவனங்கள் தொடர்பான பொது நல வழக்குகள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏ.எம்.சப்ரே குழு அளித்துள்ள அறிக்கையை இந்த வழக்குகளில் தொடர்புடைய அனைவருக்கும் வழங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்திய பங்குகள் பரிமாற்ற வாரியம் (செபி), தான் நடத்தி வருகிற விசாரணையை முடிப்பதற்கு 6 மாதகாலம் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால் ஆகஸ்டு 14-ந் தேதி வரை அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுபற்றி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, "விசாரணைக்கு 6 மாத காலம் என்பது குறைந்ததுதான். இந்த விஷயத்தில் ஒரு யதார்த்தமான பார்வையை சுப்ரீம் கோர்ட்டு எடுத்து, ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி வரை வழங்கி உள்ள காலக்கெடுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "நாங்கள் ஏற்கனவே உங்களுக்கு 2 மாதம் அவகாசம் தந்து விட்டோம். நீங்கள் (செபி) என்ன செய்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். இப்போது மேலும் 3 மாதங்கள் அவகாசம் தந்துள்ளோம். மொத்தம் 5 மாதம் அவகாசம் தரப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் 6 மாதம் அவகாசம் கேட்கிறீர்கள். நாங்கள் காலவரையறை இன்றி அவகாசம் தரப்போவதில்லை. உண்மையிலேயே உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால் அதை எங்களுக்கு தெரிவியுங்கள்" என கூறினார்.
அப்போது அவகாசத்தை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேண்டுகோள் விடுத்தார். அதற்கு தலைமை நீதிபதி, "எங்களிடம் 2 வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் தந்திருக்க முடியும். மாற்றாக ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் விசாரணையின் நிலை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள். நாங்கள் தனிப்பட்ட ஒவ்வொரு பிரச்சினையையும் கையாளவில்லை. ஆனால், விசாரணையின் நிலவர அறிக்கையைத்தான் தாருங்கள் என கேட்கிறோம்" என குறிப்பிட்டார்.
தொடர் வாதத்துக்கு பின்னர் இந்த வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதம் 11-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.