முகேஷ் அம்பானி பாதுகாப்பு விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி பாதுகாப்பு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி,
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்தது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளது.
இந்த மனு தொடர்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய கோடை கால விடுமுறை அமர்வு முன்பு ஆஜராகி, 'தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மத்திய அரசு அளித்து வரும் பாதுகாப்புக்கும், திரிபுரா அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தனிநபருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விவகாரம் பொதுநல மனுவாக தாக்கல் செய்ய உகந்தது அல்ல. இருப்பினும் பொது நல மனுவை விசாரித்த திரிபுரா ஐகோர்ட்டு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராக உத்தரவிட்டுள்ளது. எனவே மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என முறையிட்டார்.
இந்த முறையீட்டை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது.