அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பாரத் பந்த் - உஷார் நிலையில் போலீஸ்; ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!


அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பாரத் பந்த் - உஷார் நிலையில் போலீஸ்; ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!
x

நாடு முழுவதும் பல மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

புதுடெல்லி,

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது.பீகார், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்பட 9 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பல பகுதிகளிலும் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி பஸ், ரெயில் நிலைய பகுதியில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. அந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். மேலும் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அனுமதியில்லை. பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என அந்தந்த மாநிலங்களில் உள்ள போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான பாரத் பந்த் காரணமாக அமிர்தசரஸ் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

"ரெயில்வே பிளாட்பார்ம்கள், தடங்கள், உள்ளீடுகள் கண்காணிக்கப்படுகின்றன. எந்த ஒரு குற்றவாளியும் எதையும் செய்யாமல் இருக்கவும், பயணிகள் எந்த பிரச்சனையும் சந்திக்காமல் இருக்கவும் நாங்கள் ஆர்பிஎப், ஜிஆர்பி, ரெயில்வேயின் உளவுத்துறையுடன் ஒருங்கிணைத்து வருகிறோம்" என்று பஞ்சாப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


உ.பி. கோரக்பூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. "பொதுமக்களுக்கு உதவி மையம் உள்ளது. அவர்கள் உதவி மையத்தில் அனைத்து தகவல்களையும் பெறலாம். அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். ஜிஆர்பி, ஆர்பிஎப், சிவில் போலீசார் உட்பட அனைவரும் குவிக்கப்பட்டுள்ளனர்.சமூக விரோதிகளிடம் ஏமாற வேண்டாம் என்று மாணவர்களை கேட்டுக் கொள்கிறோம்" என்று அம்மாநில போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆந்திராவின் விஜயவாடா ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.முள் கம்பிகளும் போடப்பட்டுள்ளன.நகரின் அனைத்து முக்கிய இடங்களிலும் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

"முக்கிய ரெயில் நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ரெயில்வே ஸ்டேஷன்களில் காலி ரேக்குகள் மற்றும் ரெயில்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்புக்காக ஊழியர்களை நியமித்து வருகிறோம். புலனாய்வுக் குழுவிடமிருந்து முறையான தகவல்களைப் பெற்று வருகிறோம்" என்று அம்மாநில போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மேற்கு வங்காளத்தில் ஹவுரா நிலையம், ஹவுரா பாலம், சந்த்ராகாச்சி சந்திப்பு, ஷாலிமார் ரெயில் நிலையம் மற்றும் பிற இடங்களில் பாதுகாப்புப் பணியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.பல இடங்களில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. எந்த மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். இளைஞர்கள் எந்தவிதமான அசம்பாவிதச் செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று அம்மாநில போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.


அதேபோல பீகாரில் பொது இடங்களில் பன்மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தின் போது 400க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் பீகாரைச் சேர்ந்தவர்கள்.


Next Story