விசுவாசத்திற்கு அளிக்கும் பரிசாகவே பாதுகாப்பு வழங்கப்படுகிறது: உமர் அப்துல்லா பாய்ச்சல்
பஞ்சாபில் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்ட மறுநாளே பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ரீநகர்,
தற்போதைய நாட்களில் குறிப்பிட்ட நோக்கம் மற்றும் தேவையின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக விசுவாசத்திற்கு அளிக்கும் பரிசாகவே பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பது போல தோன்றுவதாக காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.
பஞ்சாபில் போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்ட மறுநாளே, பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
பஞ்சாபி பாடகர் சுட்டுக்கொலை
பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தை சேர்ந்தவர் சித்து மூஸ்வாலா. பிரபல பஞ்சாபி மொழி பாடகரான இவர், சமீபத்தில் நடந்த மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியின் முன்னணி தலைவராக செயல்பட்டு வந்த இவர் சட்டசபை தேர்தலில் மான்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் மான்சா மாவட்டத்தில் நேற்று இவர் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த சித்து மூஸ்வாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தியவர்கள் யார்? என தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகள் நடந்து வருகிறது.முன்னதாக பஞ்சாப்பில் 400-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் போலீஸ் பாதுகாப்பை நேற்று முன்தினம் மாநில அரசு திரும்ப பெற்றது. அதன்படி சித்து மூஸ்வாலாவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்ட மறுநாளே அவர் மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி இருப்பது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆம் ஆத்மி அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.