சிவசேனா கட்சியின் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்பினருக்கு கொடுக்க வேண்டும் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்


சிவசேனா கட்சியின் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்பினருக்கு கொடுக்க வேண்டும் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்
x

சிவசேனா கட்சியின் வில், அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணியினருக்கு கொடுக்க வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தி உள்ளார்.

அகமதாபாத்,

மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு எதிராக திரும்பியது கடந்த மாதத்தில் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார்.

இதன்பின்னர், பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 30-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார். பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆகியுள்ளார்.

இந்த நிலையில், சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை கைப்பற்றுவதில் உத்தவ் தாக்கரே மற்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இது தொடர்பாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் தான் உண்மையான சிவசேனா கட்சி. எனவே, கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்தை பெறுவதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன்.

ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் கூட்டணி மராட்டிய அரசின் மீதமிருக்கும் இரண்டரை ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்வார்கள். அதன் பின் வரும் அடுத்த தேர்தலில் 200 இடங்கள் வரை இந்த கூட்டணி வெற்றி பெறும்.

சிவசேனா கட்சியின் 55 எம்.எல்.ஏக்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டே உடன் உள்ளனர். இதனால் கட்சியின் சின்னத்தை அவருடைய அணிக்கே அளிக்க வேண்டும். அவருடன் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்கள் இருப்பதால் சின்னத்திற்கு உரிமை கோருவார் என உறுதியாக நம்புகிறேன்.

மேலும், ஏக்நாத் ஷிண்டேவிடம் அதிக எம்எல்ஏக்கள் இருப்பதால் அவரது அணிதான் உண்மையான சிவசேனா என கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் அளிக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.


Next Story