மந்திரிசபை விரிவாக்கம் தாமதம்: பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி


மந்திரிசபை விரிவாக்கம் தாமதம்: பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி
x

மந்திரிசபை விரிவாக்கம் தாமதமாவதால் பா.ஜனதாவின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

பெங்களூரு:

தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு

முதல்-மந்திரியாக எடியூரப்பா இருந்தபோது, அவரது மந்திரிசபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. பாலியல் புகாரில் சிக்கியதால் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மை மந்திரிசபையில், கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியாக இருந்த ஈசுவரப்பா மீது ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் கமிஷன் கேட்பதாக புகார் கூறினார். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஈசுவரப்பாவும் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து மொத்தம் 34 மந்திரிகளை கொண்ட மந்திரிசபையில் தற்போது 6 இடங்கள் காலியாக உள்ளன. இந்த கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ளன. டிசம்பர் மாதம் முடிவடைந்துவிட்டால் அதன் பிறகு ஜனவரி முதல் தேர்தல் ஜுரம் வந்துவிடும். முதல்-மந்திரி உள்பட மந்திரிகள் அனைவரும் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக கவனம் செலுத்த தொடங்கிவிடுவார்கள்.

மந்திரிசபை விரிவாக்கம்

அதனால் மந்திரிசபைியல் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மூத்த எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஓராண்டாக வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. கடந்த ஜூன் மாதம் கர்நாடகத்திற்கு வருகை தந்த உள்துறை மந்திரி அமித்ஷா, மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து தகவல் தெரிவிப்பதாக கூறினார் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்தார். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் இதுவரை மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

மந்திரிசபையை விஸ்தரித்தால் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று பா.ஜனதா மேலிட தலைவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. அதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதில் பா.ஜனதா மேலிட தலைவா்கள் மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆர்வம் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

சட்டசபை புறக்கணிப்பு

இதனால் மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள ஈசுவரப்பா, ரமேஷ் ஜார்கிகோளி, ரேணுகாச்சார்யா உள்ளிட்ட மூத்த எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் அவர்கள் சட்டசபை கூட்டத்திற்கு வராமல் அதனை புறக்கணித்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது மந்திரிசபையை விஸ்தரித்து புதியவர்களுக்கு மந்திரி பதவியை வழங்கினாலும், அவர்கள் 6 மாதங்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.

அதனால் அவர்களால் பெரிதாக எந்த பணியையும் செய்ய முடியாது என்றே சொல்லப்படுகிறது. மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் அதிருப்திகளை பகிரங்கப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story