கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு ரத்து; மாநில அரசு அறிவிப்பு
கர்நாடகத்தில் ஒக்கலிகர்-லிங்காயத் சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
இட ஒதுக்கீடு
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் மந்திரிசபை கூட்டம் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
லிங்காயத், ஒக்கலிகர்கள் உள்பட பல்வேறு சமூகத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். தலித் சமூகத்தில் உள் இடஒதுக்கீடு வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் கோரிக்கை குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை வழங்கியது.
உள் இடஒதுக்கீடு
அதன் அடிப்படையில் ஒக்கலிகர் சமூகத்திற்கு இடஒதுக்கீட்டு பட்டியலில் 2சி அந்தஸ்தும், லிங்காயத் சமூகத்திற்கு 2டி அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அந்த சமூகங்களுக்கு தற்போது இட ஒதுக்கீடு பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒக்கலிகர்களுக்கு 6 சதவீதமும், லிங்காயத் சமூகத்திற்கு 7 சதவீத இட ஒதுக்கீடும் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தலித் சமூகத்தி்ற்கு 17 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் சிறிய சமூகங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்த சமூகத்தில் வலதுசாரி சமூகங்களுக்கு 5½ சதவீதமும், இடதுசாரி சமூகங்களுக்கு 6 சதவீதமும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 5½ சதவீதம் அந்த சமூகத்தின் பிரதான பிரிவுகளுக்கு கிடைக்கும். 2பி அந்தஸ்தில் உள்ள மத சிறுபான்மையினருக்கான (முஸ்லிம்) தனி இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றம் செய்யவில்லை
அதற்கு பதிலாக அந்த சமூகத்தினர் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு(இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படுவார்கள். அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது. இதனால் முஸ்லிம் மக்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். 2ஏ அந்தஸ்தில் உள்ள 15 சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
முஸ்லிம்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 4 சதவீதம் இடஒதுக்கீடு, லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமூகங்களுக்கு தலா 2 சதவீதம் என்று பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதலாக தலா 2 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதா அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது நடப்பு பா.ஜனதா அரசின் கடைசி மந்திரிசபை கூட்டம் ஆகும். இன்னும் ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.