நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முதலில் காங்கிரஸ் தன்னை சரிசெய்ய வேண்டும் - தேவேகவுடா பேட்டி


நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முதலில் காங்கிரஸ் தன்னை சரிசெய்ய வேண்டும் - தேவேகவுடா பேட்டி
x

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முன்பு முதலில் காங்கிரஸ் தன்னை சரிசெய்துகொள்ள வேண்டும் என்று தேவேகவுடா கூறியுள்ளார்.

பெங்களூரு,

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முன்பு முதலில் காங்கிரஸ் தன்னை சரிசெய்துகொள்ள வேண்டும் என்று தேவேகவுடா கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) வெற்றி பெறும். நாங்கள் பிரித்தாளும் கொள்கை அடிப்படையில் ஓட்டு கேட்கவில்லை. நாங்கள் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி அடிப்படையில் ஆதரவு கேட்கிறோம். பஞ்சசூத்ரா திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். அதை முன்வைத்து ஓட்டு கேட்கிறோம். ஜனதா தளம் (எஸ்) ஆட்சிக்கு வரும். பஞ்சசூத்ரா திட்டங்களை நாங்கள் அமல்படுத்துவோம்.

பஞ்சசூத்ரா திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் குமாரசாமி மாநிலம் முழுவதும் பஞ்சரத்னா யாத்திரையை மேற்கொண்டு அதை நிறைவு செய்துள்ளார். இந்த யாத்திரைக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. எங்கள் கட்சியின் தேர்தல் செயல் திட்டம் மிக எளிமையானது. அதாவது கடினமாக உழைக்க வேண்டும், மக்களுடன் உண்மையாக இருக்க வேண்டும், நாங்கள் பொய் பேச மாட்டோம், மக்களை பிரிக்க மாட்டோம்.

ஜனதா தளம் (எஸ்) கட்சி மைசூரு மண்டலத்தில் மட்டுமே உள்ளதாக தேசிய கட்சிகள் எங்களுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்கின்றன. எங்கள் கட்சிக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். எங்களை குறை சொல்பவர்கள், 1999-ம் ஆண்டு முதல் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை பார்க்க வேண்டும். அப்போது நான் என்ன சொல்கிறேன் என்பது அவர்களுக்கு புரியும்.

மைசூரு மண்டலம் எங்களுக்கு அதிகளவில் ஆதரவு வழங்கியுள்ளது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த முறை நடைபெறும் தேர்தலில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும். நான் மந்திரியாக, முதல்-மந்திரியாக, பிரதமராக இ்ருந்தபோது அனைத்து தரப்பு மக்களின் நன்மைக்கும் பாடுபட்டேன். மண்டலங்கள் அடிப்படையில் நான் பாரபட்சமாக நடந்து கொண்டது இல்லை.

கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறையும் அதே போல் நிகழும். காஷ்மீர், விவசாயிகள், பட்ஜெட் என பல்வேறு அம்சங்கள் குறித்து நான் மாநிலங்களவையில் விரிவாக பேசியுள்ளேன். அதை பார்த்தால் மத்திய அரசை பற்றி நான் என்ன கூறியுள்ளேன் என்பது தெரியும். நான் எனது கடமையை எப்போதும் தீவிரமாக ஆற்றியுள்ளேன். 91 வயதிலும் அதை செய்து கொண்டிருக்கிறேன்.

நாட்டில் காங்கிரஸ் மட்டுமே எதிர்க்கட்சி அல்ல. அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் முதலில் காங்கிரஸ் தன்னை சரிசெய்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. நாட்டுக்கு தலைமை தாங்கும் திறன் கொண்ட தலைவர்கள் அதிகமாக உள்ளனர். ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.

எங்கள் கட்சி தலைவர்கள் இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்தது துரதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஜனதா பரிவார் மீண்டும் ஒருங்கிணையும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது. 3-வது, 4-வது அணி விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் என்ன செய்கிறோமோ அதை நம்புகிறேன். நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதில் நாங்கள் முன்னணியில் இருப்போம்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story