மடாதிபதி மீதான பாலியல் வழக்கு பொய்யான குற்றச்சாட்டு; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கருத்து


மடாதிபதி மீதான பாலியல் வழக்கு பொய்யான குற்றச்சாட்டு;  முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கருத்து
x

மடாதிபதி மீதான பாலியல் வழக்கு பொய்யான குற்றச்சாட்டு என்று முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கருத்து கூறியுள்ளார்.

சிவமொக்கா;

சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை கடந்த 1½ ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவமூர்த்தி முருக சரணரு உள்பட 5 பேர் மீது சித்ரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கூறியதாவது:-

சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியாது. அவர் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாக கருதுகிறேன். இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. போலீஸ் விசாரணை மீது நம்பிக்கை உள்ளது.

அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்த பின்னர் உண்மை நிலவரம் தெரியவரும். கர்நாடக மாநில தலைவராக யார் இருக்கவேண்டும். யார் இருக்ககூடாது என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும். கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதை நாங்கள் ஏற்றுகொள்வோம்.

எடியூரப்பாவிற்கு கட்சி தலைமை பதவி வழங்கியுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 2023-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா 150-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்று எடியூரப்பா நம்பிக்கை வைத்துள்ளார். அவரின் ஆசை நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story