இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிக்கமகளூரு:
தாவணகெரே மாவட்டம் நியாமதி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம் பெண். இந்த பெண் தாவணகெரேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தினமும் பஸ்சில் தான் சென்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பெண் வேலை முடிந்து வீடு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் பஸ் கிடைக்கவில்லை. இந்தநிலையில் பஸ் நிலையத்தில் காத்திருந்த அந்த பெண்ணை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விடுவதாக கூறினார். இதையடுத்து அந்த பெண் வாலிபரின் மோட்டார் சைக்கிளில் ஏறினார். பாதி வழியில் சென்றபோது, அந்த வாலிபர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்த அந்த பெண் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் நியாமதி போலீசில் புகாா் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.