'அதானி எளிமையானவர், கடினமான உழைப்பாளி' - சரத் பவார் சுய சரிதையில் புகழாரம்


அதானி எளிமையானவர், கடினமான உழைப்பாளி - சரத் பவார் சுய சரிதையில் புகழாரம்
x

கோப்புப்படம்

அதானி எளிமையானவர், கடினமான உழைப்பாளி என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தனது சுய சரிதையில் புகழாரம் சூட்டி உள்ளார்.

புதுடெல்லி,

பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள் பற்றி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

அந்த அறிக்கையில் அதானி நிறுவனங்கள் தங்களது பங்குகளின் விலையை மிகைப்படுத்தி விற்பனை செய்து மிகப்பெரிய அளவில் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலாக (சுமார் ரூ.8 லட்சம் கோடி) அதிரடியாக வீழ்ந்தது.

இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கோரி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வை முடக்கின. இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மட்டும் மாறுபட்ட நிலை எடுத்து கருத்து வெளியிட்டார். அவர், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை விட சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள வல்லுனர் குழு விசாரணையே சிறப்பானது என கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

'அதானி கடின உழைப்பாளி'

இந்த நிலையில் சரத்பவார், அதானி பற்றி தனது சுய சரிதையில் எழுதி இருப்பது தற்போது அம்பலத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரத்பவார் 2015-ம் ஆண்டு, 'லோக் மாஜே சங்கதி' என்ற பெயரில் மராத்தியில் தனது சுய சரிதையை வெளியிட்டுள்ளார். அதில்தான் அவர் அதானியை புகழ்ந்து தள்ளி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அதானி கடினமான உழைப்பாளி. அவர் மிகவும் எளிய மனிதர். மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியக் கனவுடன் வந்துள்ளார்.

எனது வலியுறுத்தலால்தான் அதானி அனல்மின் உற்பத்தித்துறையில் கால் பதித்தார்.

அவர் வைரத் தொழிலில் நன்றாக சம்பாதித்தார். ஆனால் அதில் அவருக்கு நாட்டம் இல்லை. அவருக்கு உள்கட்டமைப்பு துறையில் இறங்குவதற்கு மிகப்பெரிய லட்சியங்கள் இருந்தன. அவர் குஜராத்தின் அன்றைய முதல்-மந்திரி சிமன்பாய் படேலுடன் நல்லுறவு கொண்டிருந்தார். முத்ராவில் ஒரு துறைமுகத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை சமர்ப்பித்தார்.

ஆனால் அந்தப் பகுதி பாகிஸ்தான் எல்லையில் உள்ளது, அது வறண்ட பகுதியும் கூட என்று சிமன்பாய் படேல் எச்சரித்தார். ஆனாலும் அவர் சவாலாக அதை எடுத்துக்கொண்டார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் தந்தையின் நினைவுதினத்தையொட்டி கோண்டியாவில் நடந்த நிகழ்ச்சியில் நான் அதானிக்கு ஒரு யோசனை கூறினேன். என் யோசனையை ஏற்றுக்கொள்வதாக அதானி தனது பேச்சின்போது கூறினார். பொதுவாக மேடையில் பேசுவது அத்துடன் முடிந்து விடும். அதிகம் எதுவும் நடக்காது. ஆனால் கவுதம் அதானி எனது யோசனையைத் தொடர்ந்தார். பண்டாராவில் 3 ஆயிரம் மெகாவாட் அனல் மின்நிலையத்தை நிறுவினார் என்று அதில் சரத்பவார் எழுதி உள்ளார்.


Next Story