சரத் பவார் விலகல்: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - மூத்த தலைவர்கள் ஆலோசனை


சரத் பவார் விலகல்: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - மூத்த தலைவர்கள் ஆலோசனை
x

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் நேற்று அறிவித்தார்.

மும்பை,

நாட்டின் மூத்த அரசியல் தலைவரான இவர் 38 வயதிலேயே மராட்டிய முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தவர். 4 முறை அந்த பதவியை வகித்துள்ளார். மத்திய அரசில் ராணுவம் மற்றும் வேளாண் துறைகளில் சுமார் 10 ஆண்டு காலம் மந்திரி பதவி வகித்தவர். ஆரம்ப காலத்தில் சரத்பவார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்.

இந்த நிலையில் அவர் 1999-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார். அதே ஆண்டு அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அரசியல் சாணக்கியர் என்று அறியப்படும் சரத்பவாருடன், கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி பிற கட்சி தலைவர்களும் நட்பு பாராட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் அரங்கில் சரத்பவாரின் சுயசரிதை புத்தகத்தின் திருத்தப்பட்ட பதிவு வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அவர் தனது மனைவி பிரதீபா பவார், மகள் சுப்ரியா சுலே எம்.பி.யுடன் கலந்துகொண்டார். புத்தகத்தை வெளியிட்டு பேசிய சரத்பவார், யாரும் எதிர்பாராத விதமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்து இருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சரத் பவார் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள ஒய் பி சவான் மையத்தில் நடைபெறும் ஆலோசனையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கை தெரியவரும் என கூறப்படுகிறது.





Next Story