மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்: சசி தரூர் வலியுறுத்தல்


மணிப்பூரில்  ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்: சசி தரூர் வலியுறுத்தல்
x

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு, 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள மெய்டீஸ் இனத்தவர் தங்களுக்கு பழங்குடி இன (எஸ்.டி.) அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். 3-ந் தேதியன்று மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தியபோது, அவர்களுக்கும், மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதில் வன்முறை கோரத்தாண்டவமாடியது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாட்டுத்தலங்கள் தீயிட்டுக்கொள்ளுத்தப்பட்டன. தமிழர்கள் வாழும் மணிப்பூர்-மியான்மர் எல்லையின் மோரோ கிராமமும் தப்பவில்லை ஊரடங்கு போடப்பட்டது. ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டனர். மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது.

மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன

இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் முக்கியமான எல்லா இடங்களிலும், சாலைகளிலும் ராணுவமும், அதிரடிப்படையினரும், மத்திய ஆயுதப்படையினரும் தீவிரமான ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.

இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.


Next Story