ஜம்மு காஷ்மீரின் காவல்துறை பதக்கங்களில் இருந்து முன்னாள் முதல்-மந்திரி ஷேக் அப்துல்லாவின் படம் நீக்கப்பட்டதால் சர்ச்சை!
1947 இல் இரு தேசக் கோட்பாட்டை நிராகரித்து, காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக மாறுவதை உறுதி செய்தவர் ஷேக் அப்துல்லா ஆவார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் சிங்கம் (ஷேர்-இ-காஷ்மீர்) என்று பிரபலமாக அழைக்கப்படும் ஷேக் அப்துல்லா, புதிய காஷ்மீர் கோட்பாட்டின் சிற்பி ஆவார். காஷ்மீர் பிரதேசத்தை ஒரு முழுமையான அரசியலமைப்பு ஜனநாயகமாக மாற்ற முனைந்தவர் ஆவார். 1947 இல் இரு தேசக் கோட்பாட்டை நிராகரித்து, ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையான பகுதியாக இருந்தபோது, அதனை இந்தியாவின் ஒரு பகுதியாக மாறுவதை உறுதி செய்தவர் ஷேக் அப்துல்லா ஆவார்.
தேசிய மாநாட்டுக் கட்சி இஸ்லாமிய மக்களிடையே செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தது. அக்கட்சியின் தலைவராக ஷேக் அப்துல்லா இருந்தார். முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தந்தை இவர். உமர் அப்துல்லாவின் தாத்தா ஆவார்.
இந்நிலையில், காஷ்மீரில் ஆண்டுதோறும் புத்தாண்டு, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் வழங்கப்படும் காவல்துறையின் வீரம் மற்றும் சிறந்த சேவைக்கான பதக்கங்களில் ஷேக் அப்துல்லாவின் படம் பொறிக்கப்பட்டிருப்பது வழக்கம். ஆனால், அவருடைய படத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இந்தியாவின் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
2001 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் காவலர் பதக்கங்கள், வீரம் மற்றும் சிறந்த சேவை என இரண்டு பிரிவுகளில் சிறந்த காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தான், தேசிய மாநாடு கழகத்தின் (என்சி) நிறுவனரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியுமான ஷேக் அப்துல்லாவின் படம் நீக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜ்குமார் கோயல் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தேசிய மாநாட்டின் செய்தித் தொடர்பாளர் இம்ரான் நபி தார், "இது வரலாற்றை அழிக்கும் செயல்" என்று கூறினார். மேலும், "ஜம்மு காஷ்மீரில் ஷேக் அப்துல்லா தொடர்ந்து மக்களின் இதயங்களை ஆள்வார்" என்று கூறினார்.
ஆனால், இதற்கு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான கவிந்தர் குப்தா ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "அடிமைத்தனத்தின் அனைத்து அடையாளங்களும் அகற்றப்பட வேண்டும்" என்று கூறினார்.
முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்ட மற்றொரு அரசு உத்தரவில், "ஷேர்-இ-காஷ்மீர் போலீஸ் பதக்கத்தை" இனிமேல் "ஜம்மு காஷ்மீர் போலீஸ் பதக்கம்" என்றழைக்கப்படும் என அரசாங்கம் பெயர் மாற்றியது. அதேபோல, ஷேக் அப்துல்லாவின் பிறந்தநாளை விடுமுறை தினமாக கொண்டாடி வந்ததையும் அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.