ஒவ்வொரு நாளும் ரூ.5.6 கோடிவரை நன்கொடை அளிக்கும் ஷிவ் நாடார்!


ஒவ்வொரு நாளும் ரூ.5.6 கோடிவரை நன்கொடை அளிக்கும் ஷிவ் நாடார்!
x

image courtesy; PTI

எச்சிஎல் (HCL) டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார், ஆண்டுதோறும் ரூ.2,042 கோடி நன்கொடை அளிப்பதன் மூலம் இந்திய பரோபகார பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்

புது டெல்லி,

எச்சிஎல் (HCL) டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார், ஆண்டுக்கு ரூ. 2,042 கோடி நன்கொடைகள் வழங்கி முன்னணி இந்திய நன்கொடையாளராக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார் என்று ஹுருன் அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ. 5.6 கோடி வரை நன்கொடை அளித்துள்ளார். 78 வயதான அவர் ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

2022 தரவரிசையுடன் ஒப்பிடும்போது 76 சதவீதம் உயர்ந்துள்ள பங்களிப்புகள், கலை மற்றும் கலாசாரத்தை மையமாகக் கொண்டு, வித்யாஞானம், ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், ஷிவ் நாடார் பள்ளி மற்றும் கிரண் நாடார் கலை அருங்காட்சியகம் ஆகியவற்றின் ஆதரவை உள்ளடக்கியதாக வியாழன் அன்று வெளியிடப்பட்ட இந்தியா பரோபகாரப் பட்டியல் 2023 தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி, கல்வி தொடர்பான காரணங்களுக்காக ரூ.1,774 கோடி நன்கொடை அளித்துள்ளார். இது அவரது முந்தைய பங்களிப்புகளை விட 267 சதவீதம் அதிகமாகும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் முறையே ரூ.376 கோடி மற்றும் ரூ.287 கோடி பங்களிப்புகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி 2022ஆம் ஆண்டிலிருந்து கல்விக்காக ரூ.285 கோடி நன்கொடை அளித்து தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பஜாஜ் குடும்பம் 11 இடங்கள் முன்னேறி, முதன்மையாக கல்வித் துறையில் ரூ.264 கோடி நன்கொடைகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

1 More update

Next Story