கர்நாடகத்தில் 9 மாதத்தில் 3 தடவையாக அதிகரிப்பு; 'ஷாக்' கொடுக்கும் மின்கட்டண உயர்வு - பொதுமக்கள் ஆவேச கருத்து
கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். விலையை உயர்த்தி கொண்டே செல்வதால் நாங்கள் எங்கு செல்வது என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பெங்களூரு:
மின்கட்டணம் உயர்வு
கர்நாடகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது. அதன்பிறகு சீரமைவு (அட்ஜஸ்ட்மெண்ட்) கட்டணமும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நிலக்கரி கொள்முதல் செலவு அதிகரித்து உள்ளதால் சீரமைவு கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி பெங்களூரு மின்சார வினியோக நிறுவன (பெஸ்காம்) எல்லையில் ஒரு யூனிட்டுக்கு 43 பைசாவும், மங்களூரு மின்சார வினியோக நிறுவன (மெஸ்காம்) எல்லை பகுதியில் 24 பைசாவும், உப்பள்ளி மின்சார வினியோக நிறுவன (கெஸ்காம்) எல்லை பகுதியில் 35 பைசாவும், கலபுரகி மின்சார வினியோக (ஜெஸ்காம்) எல்லை பகுதியில் 35 பைசாவும், சாமுண்டீஸ்வரி மின்சார வினியோக நிறுவன (செஸ்காம்) எல்லை பகுதியில் 34 பைசாவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் 3 தடவை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் இல்லத்தரசிகளும், சிறு, குறு, தொழில் முனைவோரும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும், சிறு, குறு தொழில் முனைவோரும் கர்நாடக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளனர். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
மக்களை நினைத்து பார்க்க வேண்டும்
ராஜாஜிநகரை சேர்ந்த இல்லத்தரசி பிரியா:- "ஏப்ரல் மாதம் தான் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இது 'ஷாக்' கொடுப்பதாக இருக்கிறது. கொரோனா காரணமாக பலர் வேலையை இழந்து வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படிபட்ட சூழ்நிலையில் ஏழை, எளிய மக்கள் தலையில் இடியை இறக்குவது போல மின்கட்டணத்தையும் உயர்த்தி உள்ளனர். இது சரியல்ல. மின்கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஏழை, எளிய மக்களை சற்று நினைத்து பார்க்க வேண்டும்" என்றார்.
சாமுண்டிநகரை சேர்ந்த சைத்ரா:- "மின்கட்டணத்தை உயர்த்தும் முன்பு அரசு மக்களை பற்றி சற்று நினைத்து பார்க்க வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தி இருப்பதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு அரசு சிரமத்தை கொடுத்து உள்ளது. மக்களின் கஷ்டத்தை தயவு செய்து அரசு புரிந்துகொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தி கொண்டே செல்கிறார்கள். இப்படி அனைத்துக்கும் விலையை உயர்த்தினால் மக்களின் நிலை என்ன ஆகும்?" என்றார்.
'ஷாக்' கொடுக்கும் கட்டண உயர்வு
ராமமந்திர் வார்டில் வசிக்கும் சிவகாமி:- "மின்கட்டணத்தை அரசு மீண்டும் உயர்த்தி உள்ளதாகவும், வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் கூறுகிறார்கள். தற்போது மீட்டரை கணக்கெடுக்க வரும் ஊழியர்கள் சரியாக கணக்கீடு செய்கிறார்களா என்று கூட தெரியவில்லை. அடிக்கடி மின் கட்டணத்தை உயர்த்துவது எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால் தற்போது மின்கட்டணத்தை கேட்டாலே எங்களுக்கு ஷாக் கொடுக்கிறது. மின்கட்டண உயர்வை திரும்ப பெற்றால் நன்றாக இருக்கும்" என்றார்.
பேகூரை சேர்ந்த சுகுணா என்ற இல்லத்தரசி:- "அத்தியாவசிய பொருட்கள் விலை, மின்கட்டணத்தை மட்டும் தொடர்ந்து உயர்த்தி கொண்டே செல்கிறார்கள். ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு எந்த கவலையும் இல்லை. ஒரே ஆண்டில் அதுவும் 9 மாதத்தில் 3-வது முறையாக மின்கட்டணம் உயர்த்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விலைவாசியை உயர்த்தும் போது மக்களை பற்றி கவனத்தில் கொண்டால் விலைவாசியை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமே வராது. மின் கட்டண உயர்வு அதிர்ச்சி தருகிறது. மின்கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்" என்றார்.
கூலி தொழிலாளர்களுக்கு சிரமம்
உடுப்பியில் வசித்து வரும் தமிழர் சரவணன்:- "நான் தமிழ்நாட்டில் இருந்து உடுப்பியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். தற்போது மாதம் ரூ.350 முதல் ரூ.500 வரை மின்கட்டணம் செலுத்தி வருகிறேன். தற்போது மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இந்த மின்கட்டண உயர்வு எனக்கு பேரிடியாக அமைந்து உள்ளது. என்னை போன்ற கூலி தொழிலாளிகளுக்கு சிரமம் தரும் வகையில் மின்கட்டண உயர்வு உள்ளது. இந்த மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என்றார்.
மங்களூருவை சேர்ந்த சின்னராசு:- "நான் மங்களூருவில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எனது சம்பள பணத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தினர். தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். 4 மாதத்தில் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இது சரியானது அல்ல" என்றார்.
தொழில் முனைவோர் ஆதங்கம்
பிரகாஷ் நகரை சேர்ந்த சிறுதொழில் முனைவோர் வெங்கடேஷ்:- "கொரோனா காலத்தில் எனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. ஜி.எஸ்.டி. வரி செலுத்த கூட முடியவில்லை. என்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத நிலை உள்ளது. தற்போது தான் கொரோனா குறைந்து தொழிலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறேன். அதற்குள் மின்கட்டணத்தை உயர்த்தி விட்டனர். மின்கட்டண உயர்வு சிறுதொழில் நடத்தி வருபவர்களுக்கு அரசு கொடுத்த சம்மட்டி அடி" என்றார்.
மாச்சோஹள்ளியை சேர்ந்த தொழில்முனைவோர் ராமசுப்பிரமணியன்:- "மின்கட்டண உயர்வு சிறுதொழில் உரிமையாளர்களுக்கு மட்டும் அல்லாமல் கர்நாடக சிறு, குறு துறைக்கும் பேரிடியாக அமைந்து உள்ளது. நான் தற்போது மாதம் எனது தொழிற்சாலைக்கு ரூ.18 ஆயிரம் வரை மின்கட்டணம் செலுத்தி வருகிறேன். தற்போது மின்கட்டண உயர்வால் ரூ.21 ஆயிரம் வரை மின்கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. கொரோனாவால் தொழில்கள் நலிவடைந்து உள்ளது. இந்த நேரத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது சரி இல்லை" என்றார்.
இவர்களை தவிர தொழிற்சாலைகள் வைத்து நடத்தி வரும் உரிமையாளர்களும் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.