தெலுங்கானாவில் அதிர்ச்சி: தேசிய கொடி ஏற்றி திரும்பிய ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் படுகொலை
தெலுங்கானாவில் தேசிய கொடியேற்றி திரும்பிய சில நிமிடங்களில் ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கம்மம்,
இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியை சேர்ந்த முக்கிய பிரமுகரான தமினேனி கிருஷ்ணய்யா கம்மம் மாவட்டத்தில், கம்மம் ஊரக மண்டல பகுதியில் தெலடாரூபள்ளி கிராமத்தில் தேசிய கொடி ஏற்றியுள்ளார்.
அதன்பின்பு தனது பைக்கில் அவர் திரும்பியுள்ளார். ஒரு சில நிமிடங்களில், கிராமத்தின் நுழைவு பகுதிக்கு வந்து கொண்டிருந்த அவரை ஆட்டோவில் வந்த 4 பேர் வழிமறித்து, தாக்கியுள்ளனர். இதில், சம்பவ பகுதியிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதன்பின்னர் 4 பேரும் தப்பியோடி விட்டனர். அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன என காவல் உதவி ஆணையாளர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்பு ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் சிலர், கும்பலாக சென்று சி.பி.எம். தலைவர் தமினேனி கோட்டேஷ்வர் ராவ் வீடு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அவரது வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்தன.
இதனை தொடர்ந்து போலீசார் வந்து கூட்டத்தினரை கலைந்து போக செய்தனர். சான்றுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த படுகொலை சம்பவம் எதிரொலியாக தெலடாரூபள்ளி கிராமத்தில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கொல்லப்பட்ட கிருஷ்ணய்யா சி.பி.எம். கட்சியில் இருந்து சில காலங்களுக்கு முன் விலகினார். பின்னர், ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிலையில், தேசிய கொடியேற்றி விட்டு திரும்பிய சில நிமிடங்களில் அவரை அடையாளம் தெரியாத நபர்கள் படுகொலை செய்துள்ளனர்.