நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 166 இயற்கை எரிவாயு நிலையங்கள் திறப்பு!


நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 166  இயற்கை எரிவாயு நிலையங்கள் திறப்பு!
x

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, இன்று 166 இயற்கை எரிவாயு (சி.என்.ஜி) நிலையங்களை நாட்டுக்காக அர்ப்பணித்தார்.

புதுடெல்லி,

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, இன்று 166 இயற்கை எரிவாயு (சி.என்.ஜி) நிலையங்களை நாட்டுக்காக அர்ப்பணித்தார்.

இந்த சி.என்.ஜி நிலையங்கள், கெயில் இந்தியா லிமிடெட் மற்றும் அதன் குழுமத்தின் ஒன்பது நகர எரிவாயு விநியோக நிறுவனங்களால் 14 மாநிலங்களுக்குட்பட்ட 41 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட மந்திரி ஹர்தீப் சிங் பூரி பேசியதாவது:-

ரூ.400 கோடி செலவில் தொடங்கப்பட்ட இந்த சி.என்.ஜி நிலையங்கள், நாட்டில் எரிவாயு அடிப்படையிலான உள்கட்டமைப்பு மற்றும் தூய்மையான எரிபொருள் கிடைப்பதை மேலும் வலுப்படுத்தும். 2014இல் நாட்டில் சுமார் 900 சி.என்.ஜி நிலையங்கள் இருந்த நிலையில், தற்போது சி.என்.ஜி நிலையங்களின் எண்ணிக்கை 4500ஐ தாண்டியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சி.என்.ஜி நிலையங்களின் எண்ணிக்கை 8000 ஆக உயர்த்தப்படும்.

இந்த சிஎன்ஜி நிலையங்கள் மூலம் சுமார் ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பு பெறுவார்கள். இவ்வளவு பெரிய அளவில் சிஎன்ஜி மையங்களை நிறுவுவது, சிஎன்ஜி வாகனச் சந்தைக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கட்டுமானம், திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியா முழுவதும் சிஎன்ஜி அல்லது எல்என்ஜி வாகனங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு வாகன நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


இன்றைய நிகழ்வு, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளான இயற்கை எரிவாயு கிடைப்பதை அதிகரிப்பதற்கான ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான வழக்கமான எரிபொருட்களை விட, இயற்கை எரிவாயு பாதுகாப்பானது மற்றும் சிக்கனமானதாகும்.

நம் நாட்டில் முதன்மை எரிசக்தியாக பயன்பாட்டில் இருக்கும் பெட்ரோல், டீசல் போன்றவற்றுடன், இயற்கை எரிவாயுவின் பங்கை 15 சதவீதம் ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2070ம் ஆண்டுக்குள் இந்தியாவின் இலக்கை அடைவதில், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தின் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் கீழ் நடந்து வரும் சிஜிடி பணிகள் முடிந்த பிறகு, இந்தியாவின் மக்கள் தொகையில் 98 சதவீதத்தினர் மற்றும் இந்திய நிலப்பரப்பில் 88 சதவீத பகுதிகளில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Next Story