வறட்சி பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினருடன் சித்தராமையா ஆலோசனை


வறட்சி பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினருடன் சித்தராமையா ஆலோசனை
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:45 PM GMT)

கர்நாடகத்தில் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவினருடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். ரூ.4,860 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவில் பெய்யவில்லை.இதனால் பல மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் மொத்தம் உள்ள 236 தாலுகாக்களில் 195 தாலுகாக்களில் வறட்சி இருப்பதாக கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் 161 தாலுகாக்களில் கடும் வறட்சியும், 34 தாலுகாக்களில் மிதமான வறட்சியும் இருப்பதாக அரசு கூறியுள்ளது. இன்னும் சில தாலுகாக்களை வறட்சி பகுதிகள் பட்டியலில் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு ெசய்ய மத்திய குழு வர வேண்டும் என்றும், வறட்சி பாதித்த பகுதிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் வறட்சியை ஆய்வு செய்ய விவசாயத்துறை இணை செயலாளர் அஜீத்குமார் சாகு தலைமையில் 10 அதிகாரிகள் அடங்கிய மத்திய குழு நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தது.

அந்த குழுவினருடன் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

இதில் மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள குழுவின் தலைவர் அஜீத்குமார் சாகு மற்றும் அதிகாரிகள் ராஜசேகர், தாக்ரே, அசோக்குமார், பொன்னுசாமி, கரண் சவுத்திரி, மோதிராம், சங்கீத்குமார், மகேந்திர சன்டேலியா, சிவசரண் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கர்நாடகத்தில் நிலவும் வறட்சி நிலை குறித்து மத்திய குழுவினருக்கு சித்தராமையா எடுத்துக் கூறினார்.

இந்த வறட்சியால் ரூ.30 ஆயிரத்து 432 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக அரசு வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இயற்கை பேரிடர் வழிகாட்டுதல்படி கர்நாடகத்திற்கு ரூ.4 ஆயிரத்து 860 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறும் கோரினார்.

பின்னர் அந்த அதிகாரிகள் மத்தியில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

மத்திய அரசின் இயற்கை பேரிடர் விதிமுறைகளை பின்பற்றி 195 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவித்துள்ளோம். இன்னும் 32 தாலுகாக்களில் வறட்சி நிலை இருக்கிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். மாநிலத்தில் 90 சதவீதம் அளவுக்கு விதைப்பு பணிகள் நடந்துள்ளன.

இதில் 42 லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் கருகி போய் உள்ளன. நீங்கள் வறட்சி பகுதிகளை நேரில் பார்த்து மத்திய அரசுக்கு எடுத்துக் கூற வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். கடந்த ஆகஸ்டு மாதம் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்துவிட்டதால் குடிநீர் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் மழை பற்றாக்குறையால் கே.ஆர்.எஸ். அணையில் நீர் இருப்பு குறைந்துள்ளது.

குடிநீரின் தேவைக்கு 33 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் தேவைப்படுகிறது. மழை பற்றாக்குறையால் ஆதங்கமான நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்ப்படும் பயிர் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும். விவசாயிகளின் நலனை காக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த நிலையில் கர்நாடகம் வந்துள்ள 10 அதிகாரிகளும் 3 குழுக்களாக பிரிந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்கள்.

அஜீத்குமார் சாகு தலைமையிலான முதல் குழு பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, தார்வார் மாவட்டங்களிலும், ராஜசேகர் தலைமையிலான 2-வது குழு ஹாவேரி, கதக், கொப்பல், விஜயநகர் மாவட்டங்களிலும், அசோக்குமார் தலைமையிலான 3-வது குழு சிக்பள்ளாப்பூர், துமகூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, பெங்களூரு புறநகர் மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

முதல் குழுவில் 4 பேரும், மற்ற 2 குழுக்களில் தலா 3 பேரும் இடம் பெற்றுள்ளனர். ஆகமொத்தம் 13 மாவட்டங்களில் வறட்சி ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வருகிற 9-ந் தேதி வரை இந்த ஆய்வு பணி நடக்கிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 195 கால்நடை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு தீவனம் வழங்க 624 தீவன வங்கிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 41½ லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் விவசாய பயிர்கள் கருகி போய் உள்ளன. இதனால் ரூ.30 ஆயிரத்து 432 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பயிர் பாதிப்புக்கு மட்டும் ரூ.4 ஆயிரத்து 31 கோடி இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு கோரியுள்ளது. முதல்-மந்திரி ஆலோசனை நடத்துவதற்கு முன்பு வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா மத்திய குழுவினருடன் ஆலோசனை நடத்தி வறட்சி குறித்த முழு விவரங்களையும் அவர்களிடம் வழங்கினார்.


Next Story