காங்கிரசின் 3-வது பட்டியல் வெளியீடு: கோலார் தொகுதியில் சித்தராமையாவுக்கு டிக்கெட் மறுப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரசின் 3-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் கோலாரில் சித்தராமையாவுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் கொத்தூர் மஞ்சுநாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.
பெங்களூரு:
3-வது பட்டியல் வெளியீடு
224 சட்டசபை தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதியே தொடங்கியது. ஆனாலும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் முழுமையான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 42 தொகுதிளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
ஒட்டு மொத்தமாக 166 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்திருந்தது. மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று 43 தொகுதிகளுக்கான 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கிறது. இதன்மூலம் அந்த கட்சி சார்பில் இதுவரை 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
சித்தராமையா போட்டி இல்லை
நேற்று வெளியான 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலார் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த தொகுதியில் கொத்தூர் ஜி.மஞ்சுநாத் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தான் கோலாரில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். ஆனால் அங்கு வெற்றி அவ்வளவு எளிதல்ல என கூறி கட்சி மேலிடம் அவரை வருணா தொகுதியில் வேட்பாளராக களமிறக்கி உள்ளது. மேலும் கோலார் தொகுதியிலும் அவரே வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதனால் சித்தராமையா வருணா மற்றும் கோலார் தொகுதியில் போட்டியிடதயாராகி வந்தார்.
வருணா தொகுதியில் சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜனதா சார்பில் சோமண்ணா நிறுத்தப்பட்டுள்ளதால், கோலாரில் சித்தராமையா போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியான பட்டியலில் சித்தராமையா, கோலாரில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவர் ஒரே ஒரு தொகுதியில் தான் போட்டியிட இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.
லட்சுமண் சவதிக்கு வாய்ப்பு
தனக்கு ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பளித்து இருப்பதால் சித்தராமையா அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதிக்கு பெலகாவி மாவட்டம் அதானி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்திருந்த சிவலிங்கேகவுடாவுக்கு அரிசிகெரே தொகுதியிலும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திரதாலா தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு இருந்த முன்னாள் மந்திரி உமாஸ்ரீக்கு சீட் கொடுக்கப்படவில்லை. எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு எதிராக சிகாரிப்புரா தொகுதியில் ஜி.பி.மால்தேசுக்கும், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் பா.ஜனதா வேட்பாளர் சி.பி.யோகேஷ்வருக்கு எதிராக கங்காதரும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
அதுேபால் குமட்டா தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி மார்க்ரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் ஆல்வாவுக்கும், மூடிகெரே தொகுதியில் முன்னாள் மந்திரி மோட்டம்மாவின் மகள் நயனா ஜோதி ஜாவரும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் 43 தொகுதிகளுக்கான பட்டியலில் 16 புதுமுகங்கள் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.
இன்னும் 15 தொகுதிகளுக்கு மட்டும்...
காங்கிரஸ் கட்சி இதுவரை 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், இன்னும் 15 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்க வேண்டி இருக்கிறது. அந்த 15 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் பிரமுகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாலும், பா.ஜனதா 3-வது கட்ட பட்டியல் வெளியான பின்பு, 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் பா.ஜனதாவில் சீட் கிடைக்காமல் சில தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூட அதிருப்தியில் இருக்கிறார். அவருக்கு சீட் கிடைக்காமல் காங்கிரசுக்கு வந்தால் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் சீட் கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபோல் காங்கிரசில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்கள் மாற்று கட்சிக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
காங்கிரஸ் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 42 தொகுதிகளுக்கும் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் அக்கட்சி நேற்று 3-வது கட்டமாக 43 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
1. அதானி - லட்சுமண் சவதி
2. ராயபாக் (எஸ்.சி.) - மகாவீர் மோகித்
3. அரபாவி - அரவிந்த் தாள்வாய்
4.பெலகாவி வடக்கு - ஆசிப் சயீத்
5. பெலகாவி தெற்கு - பிரபாவதி மாஸ்ட்மார்டி
6.திரதாலா - சித்தப்பா ராமப்பா கொன்னூர்
7.தேவரஹிப்பரகி - சரணப்பா டி.சுனாகர்
8. சிந்தகி - அசோக் எம்.மனகுளி
9. கலபுரகி புறநகர்(எஸ்.சி.) - ரேவு நாயக் பெலமுகி
10. அவுராத்(எஸ்.சி.) - டாக்டர் சிந்தே பீம்சென் ராவ்
11.மான்வி(எஸ்.டி.) - கம்பய்யா நாயக்
12.தேவதுர்கா(எஸ்.டி.) - ஸ்ரீதேவி ஆர்.நாயக்
13.சிந்தனூர் - ஹம்பன் கவுடா படர்லி
14. சிரஹட்டி(எஸ்.சி.) - சுஜாதா என்.தொட்டமணி
15. நவலகுந்து - என்.எச்.கோனார் ரெட்டி
16. குந்துகோல் - குசுமாவதி சி.சிவள்ளி
17. குமட்டா - நிவ்தீத் ஆல்வா
18. சிருகுப்பா(எஸ்.டி.) - பி.எம்.நாக்ராஜ்
19. பல்லாரி டவுன் - நரபாரத் ரெட்டி
20. ஜகலூர்(எஸ்.டி.) - தேவேந்திரா
21. ஹரப்பனஹள்ளி - கொட்ரேஸ்
22. ஹொன்னாளி - சாந்தனா கவுடா
23. சிவமொக்கா புறநகர்(எஸ்.சி.) - சீனிவாஸ் கரியண்ணா
24. சிவமொக்கா - எச்.சி. யோகேஷ்
25. சிகாரிப்புரா - ஜி.பி.மால்தேஷ்
26. கார்கலா - உதய் ஷெட்டி
27.மூடிகெரே(எஸ்.சி.) - நாராயண ஜோதி ஜிகாவார்
28. தரிகெரே - ஜி.எச்.சீனிவாஸ்.
29. துமகூரு புறநகர் - ஜி.எச்.சண்முகப்பா யாதவ்
30.சிக்பள்ளாப்பூர் - பிரதீப் ஈஸ்வர் அய்யர்
31.கோலார் - கொத்தூர் ஜி.மஞ்சுநாத்.
32. தாசரஹள்ளி - தனஞ்செயா கங்காதரய்யா
33.சிக்பேட்டை - ஆர்.வி.தேவராஜ்.
34. பொம்மனஹள்ளி - உமாபதி சீனிவாஸ் கவுடா
35.பெங்களூரு தெற்கு - ஆர்.கே.ரமேஷ்
36. சென்னப்பட்டணா - கங்காதர்
37. மத்தூர் - கே.எம்.உதய்
38. அரிசிகெரே - கே.எம்.சிவலிங்கே கவுடா
39. ஹாசன் - பசவராஜ் ரங்கசாமி
40 மங்களூரு நகரம் தெற்கு - ஜான் ரிச்சர்டு லோபோ
41.புத்தூர் - அசோக்குமார் ராய்
42. கிருஷ்ணராஜா - எம்.கே.சோமசேகர்
43. சாமராஜா - கே.ஹரீஷ் கவுடா