வேட்பாளர்கள் தேர்வு குறித்து சித்தராமையா-டி.கே.சிவக்குமார் ரகசிய ஆலோசனை


வேட்பாளர்கள் தேர்வு குறித்து சித்தராமையா-டி.கே.சிவக்குமார் ரகசிய ஆலோசனை
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:45 PM GMT)

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

தலைவர்கள் இடையே மோதல்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனு அளிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் தலைவர்கள் மனு அளித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களுடன், நேற்று முன்தினம் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஸ்ரீசைலப்பா மரணம் அடைந்ததால், அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா பங்கேற்கவில்லை. இதனால் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே மோதல் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

பெங்களூருவில் ரகசிய ஆலோசனை

இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் ரகசியமாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது சட்டசபை தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு, பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராவது குறித்து 2 பேரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வாக்காளர்களின் தகவல்கள் திருட்டு, வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் விவகாரத்தில் அரசுக்கு எதிராக செயல்படுவது குறித்தும் 2 பேரும் ஆலோசித்தனர்.

அதே நேரத்தில் சமீபத்தில் 5 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களை டி.கே.சிவக்குமார் திடீரென்று மாற்றி இருந்தார். அவ்வாறு மாற்றிய புதிய தலைவர்களை நியமித்ததில் சித்தராமையாவின் ஆதரவாளர்களை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்தும் 2 பேரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தங்களுக்குள் எந்த மோதலும் இல்லை, தாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விதமாக சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் ரகசிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.


Next Story