பொய், அவதூறாக பேசுவதால் தான் சி.டி.ரவியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினர்; இந்திய உணவு கழக கடிதத்தை வெளியிட்டு சித்தராமையா கருத்து


பொய், அவதூறாக பேசுவதால் தான் சி.டி.ரவியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினர்; இந்திய உணவு கழக கடிதத்தை வெளியிட்டு சித்தராமையா கருத்து
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 8:31 AM GMT)

பொய், அவதூறாக பேசுவதால் தான் சி.டி.ரவியை மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

பொய், அவதூறாக பேசுவதால் தான் சி.டி.ரவியை மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார்.

ஆதாரம் இருக்கிறதா?

அன்ன பாக்கிய திட்டத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். இந்த திட்டத்தை வருகிற 1-ந் தேதி தொடங்குவதாகவும் அவர் கூறினார். இதற்கு இந்திய உணவு கழகம் முதலில் அரிசி வழங்குவதாக கூறிவிட்டு, பிறகு அதை மறுத்துவிட்டதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, இந்திய உணவு கழகம் அரிசி வழங்க மறுத்ததற்கான ஆதாரம் இருக்கிறதா? என்றும், அவ்வாறு ஆதாரம் இருந்தால் அதை பகிரங்கப்படுத்த முடியுமா? என்றும் சவால் விடுத்தார். இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா, இந்திய உணவு கழகம் அரிசி வழங்குவதாக உறுதி செய்து எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த கடிதத்தை வெளியிட்டு ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

அவதூறு பேச்சு

இந்திய உணவு கழகம் கர்நாடக அரசுக்கு கூடுதல் அரிசி வழங்குவதாக கூறிய கடிதத்தை இந்த அரசு வெளியிடுமா? என்று பா.ஜனதாவை சேர்ந்த சி.டி.ரவி கூறியுள்ளார். நான் இந்த கடிதத்தை இங்கே வெளியிடுகிறேன். இத்தகைய பொறுப்பற்ற பேச்சு, பொய் மற்றும் அவதூறு பேச்சுகளால் தான் சி.டி.ரவி போன்றவர்களை மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

பா.ஜனதா தலைவா்கள் முதலில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அன்ன பாக்கிய திட்டத்திற்கு தேவையான அரிசியை ஒதுக்குமாறு கூற வேண்டும். அதை விடுத்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மக்கள் விரோத மத்திய பா.ஜனதா அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கக்கூடாது.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.


Next Story