கர்நாடகத்தின் 22-வது முதல்-மந்திரி சித்தராமையா
கர்நாடக மாநிலத்தின் 22-வது முதல்-மந்திரி சித்தராமையா ஆவார். இவர் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா வருணா பகுதிக்கு உட்பட்ட குக்கிராமத்தில் கடந்த 1948-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி பிறந்தார். விவசாயியான சித்தராமே கவுடா- போரம்மா ஆகியோரின் 2-வது மகனாக பிறந்த சித்தராமையா மைசூருவில் தனது சட்டப்படிப்பை முடித்தார். இதைதொடர்ந்து அவர், சிக்கபோரய்யா என்ற வக்கீலிடம் ஜூனியராக பயிற்சி பெற்றார். அதையடுத்து மைசூருவில் வக்கீலாக சில ஆண்டுகள் பணியாற்றிய சித்தராமையா, தனது அரசியல் பயணத்தை பாரதீய லோக்தளம் கட்சியில் இருந்து தொடங்கினார்.
கடந்த 1983-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் அக்கட்சி சார்பில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கிய அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார். அந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்து ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. இதைதொடர்ந்து தன்னை ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்ட சித்தராமையா, கர்நாடக கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதைதொடாந்து கடந்த 1985-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு சித்தராமையா, வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். மேலும் முதல்-மந்திரி ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான மந்திரி சபையில் கால்நடைத்துறை, போக்குவரத்துறை உட்பட்ட பதவிகளை வகித்தார். மேலும் கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகர மூர்த்தியை எதிர்த்து போட்டியிட்ட சித்தராமையா தோல்வி அடைந்தார்.
அதன்பிறகு கடந்த 1992-ம் ஆண்டு ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் கடந்த 1994-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற இவர், முதல்-மந்திரி தேவேகவுடா தலைமையிலான மந்திரி சபையில் நிதித்துறை மந்திரியாக பொறுப்பேற்றார்.
கடந்த 1996-ம் ஆண்டு பிரதமராக தேவேகவுடா பதவியேற்றதால் முதல்-மந்திரி பதவி ஜே.எச்.பட்டீலுக்கு வழங்கப்பட்டது. அப்போது துணை முதல்-மந்திரியாக சித்தராமையா பொறுப்பேற்றார். ஜனதா கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து விலகிய தேவேகவுடா ஜனதாதளம்(எஸ்) என்ற புதிய கட்சியை கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கினார். அப்போது அந்த கட்சியில் சித்தராமையா தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால் அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி தோல்வியை தழுவியது.
கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கைகோர்த்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா பெயரை அந்த கட்சியை சேர்ந்த பலர் முன்மொழிந்தனர். ஆனால் சித்தராமையாவிற்கு அந்த பதவியை வழங்க விரும்பாத தேவேகவுடா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தரம்சிங்கிற்கு முதல்-மந்திரி பதவியை வழங்கினார். இதையடுத்து சித்தராமையாவுக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. இதனால் சித்தராமையா மற்றும் தேவேகவுடாவிற்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு கட்சிக்கு பங்கம் விளைவிப்பதாக கூறி சித்தராமையா அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா அகில இந்திய பிரக்திபாரா ஜனதாதளம் என்ற மாநில கட்சியை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கு மாநிலத்தில் வரவேற்பு கிடைக்காததை உணர்ந்த சித்தராமையா, அப்போது பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுகூட்டத்தில் சோனியா காந்தி முன்னிலையில் தன்னை அந்த கட்சியில் இணைத்துக்கொண்டார்.
இதைதொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய அவர் 257 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளரை தோற்கடித்தார். அப்போது இவருக்கு எதிராக தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் களம் இறங்கிய அவர் வருணா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.
மேலும் இது தனது கடைசி தேர்தல் என கூறி கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் களம் இறங்கிய அவர், வருணா தொகுதியில் வெற்றிபெற்றார். அப்போது அந்த கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து முதல்-மந்திரி பதவி சித்தராமையாவிற்கு வழங்கப்பட்டது. 5 ஆண்டுகால தனது ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த சித்தராமையா, கடந்த 2018-ம் ஆண்டு ேதா்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக களமிறங்கினார். வருணா தொகுதியை தனது மகனுக்காக விட்டு கொடுத்துவிட்டு சாமுண்டீஸ்வரி தொகுதியில் களமிறங்கினார். மேலும் பாதாமி தொகுதியிலும் சித்தராமையா போட்டியிட்டார். ஆனால் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்த அவர், பாதாமியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருக்கும் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
ஜனதாதளம் கட்சி இருந்தபோதும், காங்கிரசில் சேர்ந்த பிறகும் மொத்தம் 13 தடவை கர்நாடக சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் என்ற பெருமை சித்தராமையாவே சாரும். மூடநம்பிக்கைக்கு எதிரானவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. முதல்-மந்திரியாக இருப்பவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு சென்றால் பதவி பறிபோகும் என்ற மூடநம்பிக்கை இருந்தது. இதனால் கடந்த காலங்களில் சில முதல்-மந்திரிகள் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு செல்வதை தவிர்த்தனர். ஆனால் தான் பதவி ஏற்றதும் சித்தராமையா சாம்ராஜ்நகர் சென்று, மூடநம்பிக்கையை தகர்த்து எறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.