சிக்கிம் திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது


சிக்கிம் திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 7 Oct 2023 2:15 AM IST (Updated: 7 Oct 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கிமில் திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. மாயமாகியுள்ள 15 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 103 பேரை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

காங்டாக்,

வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் லாச்சன் பள்ளத்தாக்கில் உள்ள லோனாக் ஏரிப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேக வெடிப்பு நிகழ்ந்தது.

இதனால் குறுகிய நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் டீஸ்டா நதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளநீர் சுங்தாங் அணையை சென்றடைந்து அங்கு நீர்மட்டம் கிடுகிடுவென்று உயர்ந்ததால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையின் கீழ்ப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நதியையொட்டிய வீடுகள், கட்டிடங்களுடன், பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. பர்டாங் பகுதியில் 22 ராணுவ வீரர்கள் உள்பட ஏராளமானவர்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்கள்.

சிக்கிமில் மேக வெடிப்பு, திடீர் வெள்ளப்பெருக்குக்குப் பிந்தைய 3-வது நாளான நேற்று, பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. அவர்களில் 15 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள். மற்றொருவரின் உடல் உருக்குலைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.

மாயமான ராணுவ வீரர்களில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு வீரர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

15 ராணுவ வீரர்கள் உள்பட மாயமாகியுள்ள 103 பேரை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை, வெள்ளப்பெருக்கால் தங்கள் இடங்களில் இருந்து வெளியேறமுடியாமல் தவித்த 2 ஆயிரத்து 411 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பிடங்களை இழந்த 7 ஆயிரத்து 644 பேர், 4 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 26 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாக்யாங் மாவட்டத்தில் உள்ள ராங்போ நகரம் உள்ளிட்ட இடங்களை முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் நேரில் பார்வையிட்டார். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.

கனமழை, வெள்ளத்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து குழு அமைத்து மதிப்பீடு செய்யப்படும். இப்போதைக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளிலேயே முழுக்கவனம் செலுத்துகிறோம். மாநிலம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேர் இந்த இயற்கைச்சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் கூறினார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகளுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சிக்கிமில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக ரூ.44.80 கோடியை வழங்க அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இது முன்கூட்டிய தொகையாக அளிக்கப்படுகிறது.

அமித்ஷாவின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு அமைச்சக மத்தியக் குழுவை உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. அந்த குழு சிக்கிம் மாநிலத்துக்குச் சென்று சேத அளவை மதிப்பிடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story