டெல்லி மின்சார மாடலை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும் - மணிஷ் சிசோடியா

Image Courtesy: PTI
டெல்லியின் மின்சார மாடலை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும் என அம்மாநில துணை-மந்திரி மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியின் மின்சார மாடலை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும். மக்களுக்கு குறைந்த விலையில் அல்லது இலவச மின்சாரத்தை வழங்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என துணை மந்திரி மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
உதய்பூரில் நடைபெற்ற மாநில மின்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் டெல்லி துணை மந்திரி மணிஷ் சிசோடியா பங்கேற்றார்.
அதில் அவர் பேசுகையில், "பெட்ரோல் மற்றும் டீசலைப் போல மின்சார விலையை மாற்றிக் கொடுப்பது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் மின் கட்டணம் ஒருபோதும் கட்டுக்குள் வராது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஆபத்தானது, மேலும், அனைத்து சுமைகளும் சாமானிய மக்கள் மீதுதான் ஏற்படும்.
21-ம் நூற்றாண்டில், மின்சாரம் அடிப்படைத் தேவையாகி விட்டது, இந்த சூழ்நிலையில், 24 மணி நேர மின்சாரத்தை குறைந்த விலையில் அல்லது ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் இருக்க வேண்டும்.
மக்கள் அரசுக்கு வரி செலுத்தி நல்ல கல்வி, சுகாதாரம், மின்சாரம், தண்ணீர், சாலை, பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கு இலவச திட்டங்களை வழங்குவதற்கு வரிப்பணம் செலவிடப்படுவதாக நினைப்பது முற்றிலும் தவறானது.
பல மாநிலங்கள் தங்கள் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்காததால் அவர்களின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. வரிப்பணத்தையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை." இவ்வாறு அவர் தெரிவித்தார்.






