மத்திய பிரதேசத்தில் அண்ணி கொடுமை; கண்டு கொள்ளாத அண்ணன்: 3 சகோதரிகள் தற்கொலை


மத்திய பிரதேசத்தில் அண்ணி கொடுமை; கண்டு கொள்ளாத அண்ணன்:  3 சகோதரிகள் தற்கொலை
x

மத்திய பிரதேசத்தில் அண்ணி கொடுமை, கண்டு கொள்ளாத அண்ணனால் ஒரே கயிற்றில் 3 சகோதரிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.



போபால்,



மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் ஜவார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 3 பழங்குடியின சகோதரிகள் சில நாட்களுக்கு முன் மரத்தில் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த 3 பேரில் மூத்த சகோதரி சோனு (வயது 23). கல்லூரி மாணவி. 2வது சகோதரி சாவித்திரிக்கு (வயது 21) திருமணம் நடந்து விட்டது. படிப்பை கைவிட்ட 3வது சகோதரி லலிதா (வயது 19) தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவர்களின் தந்தை ஜாம் சிங் சமீபத்தில் உயிரிழந்து விட்டார். இவர்கள் 3 பேருக்கும், 2 சகோதரிகள் மற்றும் 3 சகோதரர்கள் உள்ளனர்.

இதுபற்றி கந்த்வா போலீஸ் சூப்பிரெண்டு விவேக் சிங் கூறும்போது, சகோதரிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கல்லூரியில் படித்த மூத்த சகோதரியின் சக மாணவிகளிடம் இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என கூறினார்.

இந்நிலையில், இந்த சம்பவம் பற்றிய அடுத்தகட்ட விசாரணையில் வேறு சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. அதில், மூத்த சகோதரியின் மொபைல் போனில் அவர்கள் பேசிய பேச்சுகள் பதிவாகி உள்ளன. அதில், வீட்டில் இருந்த கோதுமையை எடுத்து பயன்படுத்த அவர்களது அண்ணி தடுத்து உள்ளார். இதனை பற்றி அவர்களது சகோதரர் எதுவும் கூறாமல், கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார் என தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று, 2வது சகோதரிக்கு தனது திருமண வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என தெரிவித்து உள்ளனர். 3 சகோதரிகளும் அவர்களது தந்தை மீது அதிக பாசத்துடன் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் மறைந்து விட்டார். இதனால் அவர்களின் வேதனை அதிகரித்து உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் அண்ணி கொடுமை செய்தும், அதனை அண்ணன் கண்டு கொள்ளாத விரக்தியில் மரத்தில் ஒரே கயிற்றில் 3 சகோதரிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story