குடிசை சீரமைப்பு திட்ட மோசடி வழக்கு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் சரத்பவார் பெயர் - எந்த விசாரணைக்கும் தயார் என பேட்டி


குடிசை சீரமைப்பு திட்ட மோசடி வழக்கு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் சரத்பவார் பெயர் - எந்த விசாரணைக்கும் தயார் என பேட்டி
x

மும்பை குடிசை சீரமைப்பு திட்ட மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சரத்பவார் பெயர் இடம் பெற்றுள்ளது

மும்பை,

மும்பை குடிசை சீரமைப்பு திட்ட மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சரத்பவார் பெயர் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து தான் எந்த விசாரணைக்கும் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு திட்ட மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ள சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தில், "2008-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இந்த குடிசை பகுதியில் வசிப்பவர்கள் குடிசை சீரமைப்பு திட்டத்தை வலியுறுத்தி உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினர். இதற்கு பிறகு பல்வேறு கட்ட சந்திப்புக்கு பிறகு தான் ராகேஷ் வாதவான், பிரவின் ராவத் மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் இந்த திட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குற்றப்பத்திரிகையில் சரத்பவார் பெயர் இடம் பெற்றுள்ளதால், அவரை விசாரிக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சரத்பவார் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பத்ராசால் மோசடி வழக்கில் எந்த விசாரணைக்கும் எப்போதும் நான் தயாராக உள்ளேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டால், என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை கட்டவிழ்த்துவிட்ட கட்சி தலைவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மட்டும் தான் எனக்கு தெரிய வேண்டும்" என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

இன்றைக்கு தினமும் நாளிதழ்களை பார்த்தால், எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் எப்படி தங்கள் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது என்பதை விரிவாக தெரிந்துகொள்ள முடியும்.

எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும், அவர்களை கைது செய்வதும் மத்திய அரசின் முதன்மையான வேலையாக மாறிவிட்டது.

தேர்தல் முடிவு குறித்து அவர்களுக்கு சந்தேகம் எழும்போதெல்லாம், இத்தகைய நடவடிக்கைகள் முக்கிய வேலையாக மாறி விடுகிறது. நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறது. இதற்கு அரசியல் ரீதியாக நாங்கள் பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story