பா.ஜனதா சிறிய கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது - சஞ்சய் ராவத்


பா.ஜனதா சிறிய கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது - சஞ்சய் ராவத்
x

மாநிலங்களவை தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென பா.ஜனதா சிறிய கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி உள்ளார்.

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்

மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்கள் 6 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய 7 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் மராட்டியத்தில் சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு, மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

6-வது மாநிலங்களவை எம்.பி. பதவியை கைப்பற்றும் போட்டியில் சிவசேனா, பா.ஜனதா கட்சிகள் உள்ளன. 2 கட்சிகளுக்கும் போதுமான பலம் இல்லாத நிலையில் அவர்கள் சிறிய கட்சிகள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை நம்பி உள்ளனர்.

பா.ஜனதா அழுத்தம்

இந்தநிலையில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க பா.ஜனதா சிறிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " 3-வது வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட முடிவு செய்து உள்ளது. அவர்கள் சிறிய கட்சிகள், சுயேச்சைகளை தான் நம்பி உள்ளனர். எனவே சிறிய கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அது குறித்த எல்லா தகவல்களும் எங்களுக்கு வருகின்றன. மகாவிகாஸ் அகாடி அரசும் தேர்தலில் தீவிரமாக போட்டியிடுகிறது. ஆனால் எங்களிடம் அமலாக்கத்துறை மட்டும் தான் இல்லை. பா.ஜனதா தேர்தலுக்காக பணத்தை வீணாக்க கூடாது. அவர்கள் அதை சமூக பணிகளுக்கு பயன்படுத்தலாம். மகாவிகாஸ் அகாடி கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெறும்" என்றார்.

பட்னாவிஸ் கேள்வி

சஞ்சய் ராவத்தின் கருத்து குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " சஞ்சய் ராவத் யார்?. அவர் யார்?. அவர் முரணான கருத்துகளை கூறி வருகிறார். நான் ஏன் அவருக்கு பதில் அளிக்க வேண்டும்? " என கேள்வி எழுப்பினார்.


Next Story