உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்


உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்
x

மனிதர்களை சீரழிக்கும் பழக்கங்களில் புகைப்பழக்கமும் ஒன்று. புகைபிடிப்பதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆனால் ஆண், பெண் வேறுபாடின்றி சிறு வயதினர்கூட தற்போது புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

அதிகரிப்பு

கர்நாடகத்தில், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, போலீஸ் துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்பட 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தை சரிவர யாரும் நடைமுறைப்படுத்தாததால் பஸ் நிலையங்கள், டீக்கடைகள் என்று பொது இடங்களில் சிகரெட், புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் ரூ.200 அபராதம்

பெங்களூருவை பொறுத்தவரை பள்ளிகளுக்கு அருகில் 100 மீட்டருக்குள் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி அருகே சில்லறைக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வியாபாரிகளுக்கு அபராதமும் விதித்து வருவதுடன், கடைகளில் இருக்கும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். அதுபோல், பள்ளி, கல்லூரிகள், பஸ், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்களுக்கு ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும் கர்நாடக சட்டத்தில் இடம் உள்ளது. அதன்படி, பெங்களூருவில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகிறார்கள். அதுபோல், பஸ், ரெயில் நிலையங்களில் புகையிலை பயன்படுத்தி அசுத்தம் செய்வோருக்கும் மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது.

தீவிரப்படுத்த வேண்டும்

குறிப்பிட்ட பகுதிகளில் சிகரெட் புகைப்பவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். அத்துடன் பெங்களூருவை தவிர்த்து மாநிலத்தின் முக்கிய பகுதிகளிலும் அரசின் உத்தரவு முறையாக பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. புகைப்பழக்கத்தால் ஒருவருக்கு ஏற்படும் தீங்குகள், பொது இடங்களில் புகைப்பிடிப்பதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாக்டர்களும், பொதுமக்களும் தெரிவித்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-

சரியாக பின்பற்றுவதில்லை

பெங்களூரு பி.டி.எம். லே-அவுட்டை சேர்ந்த அரவிந்த் கூறும் போது, 'பெங்களூருவில் பொது இடங்களில் புகைப்பிடிப்போர் அதிகரித்து வருகின்றனர். இதனால் அவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. புகைப்பிடிப்போருக்கு அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். புகைப்பிடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுவதை, அவர்கள் உணர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தனி நபரால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்.

பெங்களூருவில் பொது இடங்களில் புகைப்பிடிப்போருக்கு போலீசார் அபராதம் விதிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பகுதிகளில் அந்த விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை. எனவே பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடிப்போர் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராத தொகையையும் அதிகரித்தால், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தவிர்க்கப்படும்', என்றார்.

பேஷனாக மாற்றி இருக்கிறார்கள்

ஜெயநகரை சேர்ந்த கோபால் கூறுகையில், 'இன்றைய சமுதாயத்தினர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பழக்கங்களால் மிகவும் சீரழிந்து வருகிறார்கள். சிகரெட் பிடிப்பதை ஒரு பேஷனாகவே மாற்றி இருக்கிறார்கள். தங்களது உடல்நலம் மீது தற்போதுள்ள இளைஞர்களுக்கு அக்கறை இல்லை. சிகரெட் உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு கிராமங்களை காட்டிலும், நகர்ப்புறங்களில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்துவது அவசியம். பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணித்து கண்டிக்க வேண்டும்', என்றார்.

இதுகுறித்து பனசங்கரியை சேர்ந்த இல்லத்தரசி செல்வி கூறும் போது, 'புகைப்பிடிப்பதால் தானும் பாதிக்கப்பட்டு, அவர்களுடன் இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். புகைப்பிடிப்பது, மது அருந்துவது உடலை பாதிக்கும் என்று தெரிந்தும், அவற்றை பயன்படுத்துகிறார்கள். பொது இடங்களில் புகைப்பிடிப்போர் அதிகரித்து வருகின்றனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பள்ளி, கல்லூரிகளின் அருகே சிகரெட், பிற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது', என்றார்.

ராபர்ட்சன்பேட்டை 4-வது பிளாக் பகுதியைச் சேர்ந்த பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வெங்கடேஷ் கூறுகையில், 'புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு என்பதை அறிந்தும் சிலர் அந்த பழக்கத்தை விடுவதாக இல்லை. மேலும் சிலர் கவுரவத்திற்காக பொது இடங்களில் புகை பிடிக்கிறார்கள். அத்தகைய செயல் கண்டனத்திற்குரியது. புகைப்பிடிப்பதால் தான் மட்டும் இன்றி தனது உறவினர்கள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டியது அவசியம். பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதை போல் கோலார் தங்கவயலிலும் பொது இடங்களில் புகைப் பிடிப்பவர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கவேண்டும்' என்றார்.

இதுபற்றி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கோடிக்கல் பகுதியைச் சேர்ந்த கவி என்பவர் கூறுகையில், 'புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்பது தெரிந்தும் கடைகளில் அவற்றை விற்பனை செய்கிறார்கள். அதை பெரியவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட வாங்கி புகைக்கிறார்கள். புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள் போகப்போக போதைப்பழக்கத்திற்கு அடிமையாக கூடும். சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை கடைகளில் விற்க அரசு தடை விதிக்க வேண்டும்' என்றார்.

அரசு தடை விதிக்க வேண்டும்

இதுகுறித்து மங்களூரு கோடிக்கல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி கூறுகையில், 'சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்யவும் அரசு தடை விதிக்க வேண்டும். அவற்றுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். கடைகளில் அவற்றை சட்டவிரோதமாக விற்காத அளவுக்கும் அரசு கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் அவற்றின் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும்' என்றார்.

--------

3 ஆண்டுகளில் அபராதம் விதிப்பில் கர்நாடகத்திற்கு முதலிடம்

நாடு முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிப்போருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாட்டிலேயே கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகத்தில் தான் அதிக நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தெரிவித்துள்ளார். அதன்படி, கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடித்ததாக கடந்த 2019-20-ம் ஆண்டில் 1.80 லட்சம் பேருக்கும், கடந்த 2020-21-ம் ஆண்டில் 1.80 லட்சம் பேருக்கும், கடந்த 2021-22-ம் ஆண்டில் 1.50 லட்சம் பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது புகைப்பிடித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

--------

ஓட்டல்களில் தனி அறை அமைக்க மாநகராட்சி உத்தரவு

பெங்களூருவில் பொது இடங்களில் புகைப்பிடிப்போருக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில், பெங்களூருவில் பொதுமக்கள் அதிக அளவில் அமர்ந்து சாப்பிடும் ஓட்டல்களில் புகைப்பிடிப்போருக்கான தனியாக அறை ஒதுக்க வேண்டும் என்று மாநகராட்சி சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது. இதற்கு ஓட்டல் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story