ஸ்மிரிதி இரானி மகள் குறித்த சர்ச்சை பதிவுகளை நீக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு!


ஸ்மிரிதி  இரானி மகள் குறித்த சர்ச்சை பதிவுகளை நீக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு!
x
தினத்தந்தி 29 July 2022 2:30 PM IST (Updated: 29 July 2022 2:48 PM IST)
t-max-icont-min-icon

தமது மகள் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த மந்திரி ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி 18 வயது மகள் ஜோயிஷ் இரானி கோவாவில் நடத்தி வரும் விடுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கூடம் இயங்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், பவன் கேரா, நெட்டா டிசோஸா ஆகியோர் குற்றம் சாட்டினர். இதற்கு பொறுப்பேற்று மந்திரி பதவியில் இருந்து ஸ்மிரிதியை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், தமது மகள் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த மந்திரி ஸ்மிரிதி, மூன்று பேருக்கும் எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் தமக்கும் தமது மகளின் பெயருக்கும் களம் ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்மிரிதி இரானி மற்றும் அவரது மகள் தொடர்பான டுவிட்டர் பதிவுகள், வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க வேண்டும் என்று நீதிபதி மினி புஷ்கர்ணா கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பான பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பதிவுகளை 24 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story