ரூ.1¼ கோடி பாக்கு மூட்டைகள் லாரியுடன் கடத்தல்


ரூ.1¼ கோடி பாக்கு மூட்டைகள் லாரியுடன் கடத்தல்
x

சிவமொக்காவில் இருந்து அகமதாபாத்துக்கு விற்பனைக்காக கொண்டு சென்ற ரூ.1¼ கோடி பாக்கு மூட்டைகள் லாரியுடன் கடத்தப்பட்டுள்ளதாக போலீசில் வியாபாரி புகார் அளித்துள்ளார். டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

சிவமொக்கா;

போலீசில் வியாபாரி புகார்

சிவமொக்கா டவுன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் டோலாராம். பாக்கு வியாபாரியான இவர், கோட்டை போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், பாக்கு வியாபாரியான நான்(டோலாராம்) பல்வேறு மாநிலங்களுக்கு பாக்கு விற்பனை செய்து வருகிறேன்.

அதன்படி கடந்த மாதம்(மே) 25-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள பாக்கு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ரூ.1¼ கோடி மதிப்பிலான பாக்குகளை லாரி ஒன்றில் அனுப்பி வைத்தேன். லாரியை, சிவமொக்கா டவுன் திப்புநகரை சேர்ந்த கவுஸ் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் கிளீனர் ஒருவரும் சென்றார்.

ரூ.1¼ கோடி பாக்குகளுடன் லாரி கடத்தல்

கடந்த 30-ந்தேதி பாக்குமூட்டைகள் அகமதாபாத் நகருக்கு போய் சேரவேண்டி இருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பாக்குமூட்டைகளை ஏற்றி சென்ற லாரி அங்கு சென்றடையவில்லை. இதுபற்றி லாரி டிரைவரிடம் கேட்க செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டேன்.

ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாக வருகிறது. இதனால் லாரியுடன் பாக்குமூட்டைகள் கடத்தப்பட்டு உள்ளது தெரியவருகிறது. எனவே, லாரியை கண்டுப்பிடித்து பாக்குமூட்டைகள் திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் லாரி டிரைவரின் சிக்னலை வைத்து லாரியை கண்டுப்பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story