பினராயி விஜயனுக்கு எதிரான எஸ்.என்.சி.-லாவ்லின் முறைகேடு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் மே மாதம் விசாரணை


பினராயி விஜயனுக்கு எதிரான எஸ்.என்.சி.-லாவ்லின் முறைகேடு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் மே மாதம் விசாரணை
x

சுப்ரீம் கோர்ட்டில் பினராயி விஜயன் உள்பட 7 பேர் மீதான முறைகேடு வழக்கு மே 1-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.

புதுடெல்லி,

கடந்த 1996-ம் ஆண்டு கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல், செங்குளம், பன்னியார் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையங்களை புனரமைக்க கேரள அரசு, கனடாவைச் சேர்ந்த எஸ்.என்.சி.-லாவ்லின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தால் கேரள மின்சார வாரியத்துக்கு ரூ.374 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கேரள அரசின் அப்போதைய மின்சாரத்துறை மந்திரியாக இருந்த பினராயி விஜயன் உள்பட 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதனிடையே பினராயி விஜயனையும் மற்ற 6 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமும், கேரள ஐகோர்ட்டும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்து வந்த நிலையில், வரும் மே மாதம் 1-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.


Next Story