குறைந்த விலைக்கு சோலார் பேனல் தருவதாக விவசாயியிடம் ரூ.1½ லட்சம் மோசடி


குறைந்த விலைக்கு சோலார் பேனல் தருவதாக விவசாயியிடம் ரூ.1½ லட்சம் மோசடி
x

சிக்கமகளூருவில் குறைந்த விலைக்கு சோலார் பேனல் தருவதாக விவசாயியிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மா்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனா்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா பெட்டத தாவரகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ் டிசோசா. விவசாயி. இவர் தனது தோட்டத்திற்கு சோலார் பேனல் வாங்க முடிவு செய்தார். இதற்காக அவர் இணையதளத்தில் தேடி பார்த்தார். அப்போது, இணையதளத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான சோலார் பேனலை ரூ.1.68 லட்சத்துக்கு கொடுப்பதாக விளம்பரம் இருந்தது.

இதையடுத்து ஜார்ஜ், அந்த இணையதளத்தில் இருந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, எதிர்முனையில் பேசிய நபர் குறைந்த விலைக்கு சோலார் பேனல் தருவதாகவும், வங்கி கணக்கு பணம் அனுப்பினால், வீட்டு முகவரிக்கு சோலார் பேனலை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.

அதன்படி ஜார்ஜூம், ரூ.1.68 லட்சத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் சோலார் பேனல் அவருக்கு வரவில்லை. மேலும் அந்த நபரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

அப்போது தான் மர்மநபர் சோலார் பேனல் தருவதாக கூறி ரூ.1.68 லட்சத்தை மோசடி செய்ததை ஜார்ஜ் உணர்ந்தார். இதுகுறித்து அவர் கொப்பா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story