சில பா.ஜ.க. தலைவர்கள் நலனுக்கு பயன்படுகிறது எல்.ஐ.சி., வங்கிகளின் பணம்: மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு


சில பா.ஜ.க. தலைவர்கள் நலனுக்கு பயன்படுகிறது எல்.ஐ.சி., வங்கிகளின் பணம்: மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு
x

எல்.ஐ.சி. மற்றும் தேசிய வங்கிகளின் பணம் தனது கட்சியின் சில தலைவர்கள் பலன்பெற பா.ஜ.க. பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.


கொல்கத்தா,


நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். இதில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதனை முன்னிட்டு பங்கு வர்த்தகம் லாபத்துடன் காணப்பட்டது.

ஆனால், இந்திய பங்கு சந்தைகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சரிவை கண்டன. இந்நிலையில், மேற்கு வங்காள புர்பா பர்தமான் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, எல்.ஐ.சி. மற்றும் தேசிய வங்கிகளில் போடப்பட்டுள்ள மக்களின் பணம் எடுக்கப்பட்டு பா.ஜ.க.விலுள்ள சில தலைவர்கள் பலன் அடைவதற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், பங்கு சந்தை பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்து விட்டது என குற்றம் சாட்டிய அவர், சிலருக்கு தொலைபேசி வழியே அழைப்பு விடுத்து, ஆயிரக்கணக்கான கோடி தொகையை முதலீடு செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

பட்ஜெட் முழுவதும் பொய்கள் நிறைந்தது என கூறிய அவர், 2024 பொது தேர்தலை கணக்கில் கொண்டே மத்திய அரசு பட்ஜெட் தயாரித்து உள்ளது என மம்தா கூறியுள்ளார்.


Next Story