சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் - வெளியான முக்கிய தகவல்


சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் - வெளியான முக்கிய தகவல்
x

கோப்புப்படம்

நாடாளுமன்ற மேல்-சபை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சோனியா காந்தி போட்டியிடுகிறார். இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது..

புதுடெல்லி,

நாடாளுமன்ற மேல்-சபை எம்.பி.க்கள் 56 பேரின் பதவி காலம் முடிவடைகிறது. இவர்கள் அனைவரும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படவேண்டும்.

இதற்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இதற்காக பா.ஜனதா, சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் ஆலோசித்துள்ளார். எனவே இன்று (புதன்கிழமை) காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். .

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரலியில் போட்டியிடும்போதே சோனியா காந்தி, இனி மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.

எனவே சோனியா காந்தி, மேல்-சபை தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் மேல்-சபை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவார் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்காக இன்று (புதன்கிழமை) ஜெய்ப்பூர் செல்லும் சோனியா காந்தி, அங்குள்ள சட்டசபை வளாகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தியும் கலந்து கொள்கிறார்.

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி 1999-ம் ஆண்டு பதவியேற்றார். அதன்பிறகு அவர் 5 முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா காந்தி மேல்-சபை தேர்தலில் போட்டியிடுவது உறுதியானதால், ரேபரலி அல்லது அமேதி மக்களவை தொகுதியில் பிரியங்கா போட்டியிடலாம் என்று கட்சியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதுபற்றி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.


Next Story