ஜனாதிபதியின் அதிகாரம் குறைய காரணமாக திகழ்ந்த எஸ்.ஆர்.பொம்மை


ஜனாதிபதியின் அதிகாரம் குறைய காரணமாக திகழ்ந்த எஸ்.ஆர்.பொம்மை
x

எஸ்.ஆர்.பொம்மை என அழைக்கப்பட்ட சோமப்ப ராயப்ப பொம்மை கர்நாடகத்தின் 11-வது முதல்-மந்திரி ஆவார். இவர் ஹாவேரி மாவட்டம் சிக்காம் தாலுகா கரடகி கிராமத்தில் கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி பிறந்தார். அப்போது சிக்காம் தாலுகா ஒருங்கிணைந்த தார்வார் மாவட்டத்தின் கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது. சட்ட படிப்பை முடித்த இவர் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கர்நாடக மேல்-சபை உறுப்பினராக பதவி வகித்து உள்ளார்.

கடந்த 1978-ம் ஆண்டு உப்பள்ளி புறநகர் தொகுதியில் போட்டியிட்ட இவர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். மேலும் கடந்த 1983-ம் ஆண்டு நடத்த சட்டசபை தேர்தலில் ஜனதாகட்சி மாநிலத்தில் ஆட்சியை பிடித்தபோது முதல்-மந்திரி ராமகிருஷ்ண ஹெக்டேவின் மந்திரி சபையில் தொழில்துறை மந்திரியாக பணியாற்றி உள்ளார். இதைதொடர்ந்து கடந்த 1988-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பொம்மைக்கு, ஆட்சி நடத்த போதிய பலம் இல்லை எனக் கூறி ஷரத் 356-யை பயன்படுத்தி மத்திய அரசு இவரது ஆட்சியை கலைத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொம்மை சட்டசபையில் பலத்தை நிரூபிக்க அப்போது கவர்னராக இருந்த வெங்கடசுப்பையாவிடம் அனுமதி கோரினார். ஆனால் இதற்கு அவர் அனுமதி மறுக்கவே மத்திய அரசு சரத்து 356-ஐ தவறாக பயன்படுத்துவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோட்டும், மாநில அரசின் உரிமையை பறிக்கும் ஷரத் 356-ஐ நடைமுறைப்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து கடந்த 1990-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பொம்மை பதவி வகித்தார். அதன்பிறகு மத்திய அரசியலில் நுழைந்த இவர் 1992, 1998 ஆண்டுகளில் டெல்லி மேல்-சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மந்திரி சபையில் கடந்த 1996-ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு துறை மந்திரியாக பொறுப்பேற்றார். ஜனதா கட்சியில் பலம் மிக்க தலைவராக வலம் வந்த இவர் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி உயிர் இழந்தார். எஸ்.ஆர்.பொம்மை தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story