நாளை சூரிய கிரகணம்: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திறந்தே இருக்கும்


நாளை சூரிய கிரகணம்: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திறந்தே இருக்கும்
x

நாளை சூரிய கிரகணம் நடப்பதால், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திறந்தே இருக்கும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

ஸ்ரீகாளஹஸ்தி,

நாளை சூரிய கிரகணம் நடப்பதால், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திறந்தே இருக்கும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். மூலவர்களுக்கு மட்டும் சாந்தி அபிேஷகம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி தென் கயிலாயமாக கருதப்படுகிறது. அங்கு எழுந்தருளியிருக்கும் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சுயம்பு லிங்கமாகும். இது, பஞ்சபூத தலங்களில் வாயு தலமாக விளங்குகிறது.

இந்தநிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.40 மணி வரை சூரிய கிரகணம் நடக்கிறது. இதனால், நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் நடை சாத்தப்பட்டு இருக்கும். ஆனால், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மட்டும் நடை சாத்தப்படுவது இல்லை, திறந்தே இருக்கும்.

சூரியனும், சந்திரனும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு கட்டுப்பட்டவர்கள் ஆவர். இதனாலேயே ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சூரிய, சந்திர கிரகண நேரத்தில் நடை சாத்தப்படுவது இல்லை. எப்போதும்போல கோவில் திறந்திருக்கும். பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்..

ஆனால் நாளை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சூரிய கிரகண நேரத்தில் மட்டும் மூலவர்களுக்கு சாந்தி அபிஷேகம் நடத்தப்படும் எனக் கோவில் புரோகிதர்கள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் தெரிவித்தனர்.

கோவிலில் வழக்கமாக தீபாவளிக்கு மறுநாள் கேதார கவுரி விரத பூஜை நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டுக்கான கேதார கவுரி விரத பூஜை நாளை வருகிறது. இருப்பினும், நாளை சூரிய கிரகணம் நடப்பதால் கேதார கவுரி விரத பூஜையை நடத்த இயலாது என்பதால், அந்தப் பூஜையை கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

சூரிய கிரகணம் முடிந்ததும் கோவில் வளாகம் முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்து மூலவர்களுக்கு சாந்தி அபிஷேகம் மட்டும் நடத்தப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஐந்து கால அபிஷேகம் நடப்பது வழக்கம். ஆனால், நாளை மாலை நடக்கும் நான்காம் கால அபிஷேகத்தை சாந்தி அபிஷேகமாக இரவு 7 மணிக்கு நடத்தப்படும், எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story