ஆற்றில் குதித்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தற்கொலை
இன்று (வெள்ளிக்கிழமை) தேர்வு தொடங்க உள்ள நிலையில் ஆற்றில் குதித்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
மங்களூரு-
இன்று (வெள்ளிக்கிழமை) தேர்வு தொடங்க உள்ள நிலையில் ஆற்றில் குதித்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா கோடிம்பாலா அருகே குந்திமஜலு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகன் அத்வைத் ஷெட்டி (வயது 15). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. இந்த தேர்வுக்காக அத்வைத் தயாராகி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற அத்வைத் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அத்வைத்தை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
தற்கொலை
இந்த நிலையில், குமாரதாரா ஆற்றங்கரையோரத்தில் அத்வைத்தின் பள்ளி பேக், காலணி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், இதுகுறித்து கடபா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடபா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் ஆற்றில் குதித்து அத்வைத்தின் உடலை தேடினர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அத்வைத்தின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் போலீசார் அத்வைத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்வைத் ஷெட்டி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து கடபா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.