கர்நாடகத்தில் மாநிலங்களவை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது


கர்நாடகத்தில்  மாநிலங்களவை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது
x

கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 உறுப்பினர் பதவிகளுக்காக நாளை (வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. 4-வது உறுப்பினர் பதவியை கைப்பற்ற பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 உறுப்பினர் பதவிகளுக்காக நாளை (வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. 4-வது உறுப்பினர் பதவியை கைப்பற்ற பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தல்

நாடு முழுவதும் மாநிலங்களவையில் காலியாகும் 57 உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இவற்றில் கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 உறுப்பினர் பதவிகளும் அடங்கும். இந்த 4 உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவை முடிந்துள்ளது. இதையடுத்து, நாளை (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், சட்டசபை செயலாளர் விசாலாட்சி செய்துள்ளார். இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஓட்டுப்போட தகுதியானவர்கள். அதாவது கர்நாடகத்தில் 224 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அந்த 224 பேரும் மாநிலங்களவை தேர்தலில் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். பா.ஜனதாவில் 119 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசில் 69 எம்.எல்.ஏ.க்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் 32 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதுதவிர சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவரும் உள்ளனர்.

நாளை ஓட்டுப்பதிவு

ஓட்டுப்பதிவு பெங்களூரு விதானசவுதாவில் நாளை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதாவது நாளை மாலை 5 மணியில் இருந்தே ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 4 உறுப்பினர் பதவிகளுக்கு பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் ஒட்டு மொத்தமாக 6 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதாவது பா.ஜனதா சார்பில் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர் சிங் ஆகிய 3 பேரும், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் மன்சூர்கானும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் குபேந்திர ரெட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறார். மாநிலங்களவை தேர்தலில் ஒரு உறுப்பினர் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாகும். அதன்படி, பா.ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் மூலம் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

3 கட்சிகள் இடையே போட்டி

அதுபோல், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் மூலம் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. ஆனால் 4-வது உறுப்பினர் பதவிக்கு தான் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. 2 உறுப்பினர்கள் வெற்றி பெற்றது போக, பா.ஜனதா வசம் 32 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. அதாவது சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவரின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அக்கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள லெகர் சிங் வெற்றி பெற 13 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்ற பின்பு, 24 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. அதுபோல், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குபேந்திர ரெட்டி வெற்றி பெற 13 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. இதன் காரணமாக 4-வது உறுப்பினர் பதவியை கைப்பற்ற பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே பலத்த போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

4-வது உறுப்பினர் யார்?

இந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்படி, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கேட்டுள்ளார். அதுபோல், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற, ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறி வருகிறார். இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால், அக்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. அந்த கட்சிகள் கூட்டணி அமைக்குமா? என்பது இன்று (வியாழக்கிழமை) தெரிந்து விடும்.

அதே நேரத்தில் 2 கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக 3 கட்சிகளும் தங்களது எம்.எல்.ஏ.க்கள் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மாற்றி ஓட்டுப்போடாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து வெற்றி பெறும் 4-வது உறுப்பினர் யார்? என்பது பற்றி நாளை ஓட்டு எண்ணிக்கையின் போதே தெரியவர வாய்ப்புள்ளது.


Next Story