வந்தே பாரத் ரெயில் மீது மே.வங்காளத்தில் வைத்து கல் வீசப்படவில்லை: மம்தா பானர்ஜி
பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், தனது மாநிலம் அல்ல என்றும் மேற்கு வங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கிவைத்தார். இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை அந்த ரெயில் புது ஜல்பைகுரியில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்றது.
மால்டா மாவட்டத்தின் குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர். அதில் ஒரு பெட்டியின் கண்ணாடி கதவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டு, அடுத்து வந்த வழக்கமான நிறுத்தமான மால்டா ரெயில் நிலையத்தில்தான் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அண்டை மாநிலமான பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், தனது மாநிலம் அல்ல என்றும் மேற்கு வங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், தனது மாநிலத்தை அவதூறு செய்த ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- மூன்று நாட்களாக நிறைய டி.வி. சேனல்கள் வங்காளத்தை அவதூறாகப் பேசி வருவதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
போலிச் செய்திகளைக் காட்டி, பொய்யான தகவலைப் பரப்பி வங்காளத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சட்டம் அதன் கடமையை செய்யும். இது வங்காளத்தில் நடக்கவில்லை. பீகாரில் நடந்துள்ளது. அவர்கள் ஏதாவது செய்திருந்தால் பீகார் மக்களுக்கு புகார் இருக்கும். இருப்பினும் பீகாரை அவமதிப்பது சட்டவிரோதமானது. இந்த சேவைகளை பெற அவர்களுக்கும் உரிமை உண்டு. அங்கு ஆட்சியில், அவர்களுக்கு இந்த சேவைகளை மறுக்க முடியாது. வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை. இது ஒரு புதிய என்ஜின் பொருத்தி புதுப்பிக்கப்பட்ட பழைய ரெயில். இவ்வாறு அவர் கூறினார்.