முதல்-மந்திரி பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும் மந்திரி மதுபங்காரப்பா பேட்டி
காவிரி விவகாரத்தில் முதல்-மந்திரி பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும் என மந்திரி மதுபங்காரப்பா கூறினார்.
சித்ரதுர்கா-
காவிரி விவகாரத்தில் முதல்-மந்திரி பற்றிஅவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும் என மந்திரி மதுபங்காரப்பா கூறினார்.
காவிரி போராட்டம்
சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா நேற்றுமுன்தினம் வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- காவிரி விவகாரத்தில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு எந்தவித பயனும் கிடையாது. இரு கட்சிகளின் போராட்டம் மக்களை ஏமாற்றும் வேலை ஆகும்.
கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 66 இடங்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனை அவர்கள் நினைத்து பார்்க்க வேண்டும். அந்த தேர்தலில் இரு கட்சிகளும் சேர்ந்தால் கூட ஆட்சியை பிடித்து இருக்க முடியாது. அவ்வாறு இருக்கும் நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி வைத்து என்ன பிரயோஜனம். அவர்களால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை.
போராட்டம்
மக்களுக்காக இரு கட்சிகளும் இதுவரை எந்த ஒரு போராட்டமும் நடத்தியது கிடையாது. தற்போது காவிரி போராட்டம் மூலம் நாங்கள் இருக்கிறோம் என இரு கட்சிகளும் கூறி கொண்டு வருகிறார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்்தலில் பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் வெற்றி பெற முடியாது. கர்நாடகத்தில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காவிரி விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் தமிழ்நாடு ஏஜெண்டாக செயல்படுகிறார்கள் என முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். எடியூரப்பா ஆட்சியில் இருந்த காலத்தில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது அவர் தமிழக ஏஜெண்டாக இருந்தாரா?.
மத்திய அரசு
ஒருவரை அவதூறாக பேசுவதற்கு முன்பு தான் எப்படி உள்ளோம் என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு கட்டுக்குள் தான் உள்ளது.
எனவே எடியூரப்பா டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் காவிரி விவகாரம் குறித்து பேசட்டும். இவ்வாறு அவர் கூறினார்.