படுகொலை சம்பவங்களை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை; மத்திய மந்திரி ஷோபா வலியுறுத்தல்


படுகொலை சம்பவங்களை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை; மத்திய மந்திரி ஷோபா வலியுறுத்தல்
x

படுகொலை சம்பவங்களை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை அவசியம் என மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.

மங்களூரு;

பா.ஜனதா பிரமுகர் படுகொலை

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். பா.ஜனதா பிரமுகர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்களால் இவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடையதாக ஜாகீர், ஷபீக் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த படுகொலை சம்பவத்தால் மங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பா.ஜனதா பிரமுகர் கொலைக்கு இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும், மாநில அரசை கண்டித்தும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

என்.ஐ.ஏ. விசாரணை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம், பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கை என்.ஐ.ஏ.விடம் (தேசிய புலனாய்வு முகமை) மாற்ற கோரி மத்திய மந்திரி ஷோபா கூறியிருந்தார். அதன்பேரில் தற்போது இந்த கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட பிரவீன் நெட்டார் வீட்டிற்கு நேரில் சென்ற மத்திய மந்திரி ஷோபா, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரவீன் நெட்டார் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்வார்கள்.

சட்ட நடவடிக்கை

மேலும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் அதற்கான காரணம் புலப்படும். கர்நாடகத்தில் அதிகரித்து வரும் படுகொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். நாட்டில் இதுபோன்ற படுகொலைகள் நடக்காமல் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story