இந்து மதம் குறித்த சர்ச்சை கருத்து; சதீஷ் ஜார்கிகோளிக்கு வலுக்கும் எதிர்ப்பு - மன்னிப்பு கேட்க பா.ஜனதா வலியுறுத்தல்


இந்து மதம் குறித்த சர்ச்சை கருத்து; சதீஷ் ஜார்கிகோளிக்கு வலுக்கும் எதிர்ப்பு - மன்னிப்பு கேட்க பா.ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Nov 2022 6:45 PM GMT (Updated: 8 Nov 2022 6:46 PM GMT)

இந்து மதம் குறித்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிகோளியின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் மன்னிப்பு கேட்க பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு:

சதீஷ் ஜார்கிகோளி சர்ச்சை கருத்து

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக இருப்பவர் சதீஷ் ஜார்கிகோளி.இவர் நேற்று முன்தினம் பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, இந்து என்ற சொல் பார்சியன் மொழியை சேர்ந்தது என்றும், அந்த சொல் ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்தது என்றும், இந்து என்ற சொல்லுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும் பேசி இருந்தார்.

மேலும், இந்து என்ற சொல்லின் அர்த்தம் மோசமானது என்றும் தெரிவித்து இருந்தார். இந்து குறித்த அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கண்டித்ததுடன் இந்து மதம் குறித்த விஷயத்தில் காங்கிரசுக்கு உயரிய மரியாதை உள்ளதாக தெரிவித்தார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பசவராஜ் பொம்மை கண்டனம்

இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடுப்பியில் நடந்த ஜனசங்கல்ப யாத்திரையை முடித்துவிட்டு ஹெலிபேடில் வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

"சதீஷ் ஜார்கிகோளியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது கருத்தை அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ராகுல்காந்தி, சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்?. சதீஷ் ஜார்கிகோளியின் கருத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா?. சதீஷ் ஜார்கிகோளியின் கருத்து தற்செயலானது இல்லை. சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளை கவரும் நோக்கத்தில் பேசி உள்ளார்.

இந்து மதத்தை அவமதிப்பதன் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றுவிடலாம் என காங்கிரஸ் கட்சியினர் மாயையில் உள்ளனர். சதீஷ் ஜார்கிகோளிக்கு இந்து மதத்தை பற்றி அரைகுறை அறிவு மட்டுமே உள்ளது. ஆழமாக ஆய்வு செய்யாமல் கருத்துகளை வெளியிடக்கூடாது. இது இந்து விசுவாசிகளின் உணர்வுகளை புண்படுத்தும். அவரது கருத்து கண்டிக்கத்தக்கது."

இவ்வாறு அவர் கூறினார்.

பதவியை பறிக்க வேண்டும்

கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறுகையில், 'கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி, இந்து சொல்லை இழிவுப்படுத்தி கருத்து கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி எப்போதும் நமது பழமையான கலாசாரம், மதத்தை இழிவுப்படுத்துகிறது. அவர் கூறிய கருத்துகள் தவறானவை. சதீஸ் ஜார்கிகோளி மீது அக்கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது கட்சி பதவியை பறிக்க வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடகத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் இந்து மதத்தை இழிவுப்படுத்தியதை நியாயப்படுத்துவது போன்றதாகும்' என்றார்.

சித்தராமையா- டி.கே.சிவக்குமார்

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறுகையில், "சதீஸ் ஜார்கிகோளியின் கருத்து குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. எங்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறிய கருத்தே எனது கருத்து ஆகும்" என்றார்.

அதே போல் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கூறும்போது, "சதீஸ் ஜார்கிகோளியின் கருத்தை நிராகரிக்கிறேன். அது அவரது சொந்த கருத்து. அவரிடம் விளக்கம் கேட்பேன்" என்றார்.


Next Story