'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை


நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை
x

புதுவையில் ‘நீட்’ தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அண்ணாநகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் துரைராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவரது மனைவி பரிமளம். இவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் பிரியதர்ஷினி. மகன் ஹேமச்சந்திரன் (வயது 20). இவர்கள் இருவரும் தாயாருடன் வசித்து வருகின்றனர். பிரியதர்ஷினி தற்போது தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

ஹேமச்சந்திரன் பிளஸ்-2 முடித்து விட்டு, மருத்துவ கல்லூரியில் சேரும் ஆசையில் ஏற்கனவே 2 முறை 'நீட்' தேர்வு எழுதினார். இரு முறையும் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தார். தற்போது 3-வது முறையாக 'நீட்' தேர்வுக்கு கடந்த சில மாதங்களாக தீவிரமாக பயிற்சி பெற்று வந்தார்.

தாய், சகோதரி ஆலோசனை

நாடு முழுவதும் நேற்று 'நீட்' தேர்வு நடந்தது. தேர்வுக்கு ஆயத்தமாக நேற்று முன்தினம் வீட்டில் படித்து கொண்டிருந்த அவருக்கு, 3-வது முறையாக எழுத இருக்கிறோம். இந்த முறையாவது நல்ல மதிப்பெண் கிடைக்குமா? என்ற பயம் தொற்றிக்கொண்டது.

இதனால், மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது பதற்றத்தை அறிந்த தாயார் பரிமளமும், சகோதரி பிரியதர்ஷினியும் 'நீட்' தேர்வு எழுதுவது குறித்து ஹேமச்சந்திரனுக்கு தைரியம் கொடுத்து, ஆலோசனைகள் வழங்கி இருக்கிறார்கள். நள்ளிரவு 1 மணிக்கு தாயார் பரிமளம் மகனின் அறைக்கு சென்று பார்த்தபோது நீட் தேர்வுக்காக படித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அயர்ந்து தூங்கி விட்டனர்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை ஹேமச்சந்திரன் படுத்திருந்த அறைக்கு பரிமளம் சென்று பார்த்தபோது, ஹேமச்சந்திரன் ஜன்னல் கம்பியில் சேலையால்தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

இது குறித்து பரிமளம் போலீசில் கொடுத்த புகாரில், ''மகன் தற்கொலை செய்து கொண்ட அறையில் அவன் கைப்பட இரு பக்கத்தாளில் ஆங்கிலத்தில் கடிதம் எழுதியது கிடைத்தது. அந்த கடிதத்தில், எனது அம்மாவை யாரும் குறை சொல்ல வேண்டாம். இது என்னுடைய முடிவு. என எழுதப்பட்டிருந்தது. ஆகையால் நீட் தேர்வை எழுதுவதற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டான்'' என தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story