ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் - மேலும் இருவர் கைது


ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் - மேலும் இருவர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2023 12:34 PM GMT (Updated: 13 Aug 2023 1:11 PM GMT)

சீனியர் மாணவர்களின் ராகிங்கால் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா,

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர், சீனியர் மாணவர்களின் ராகிங்கால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில், ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வப்னாதிப் என்ற மாணவர். இவர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்த நிலையில், அதே விடுதியில் தங்கி இருந்த சீனியர் மாணவர்களில் சிலர் ஸ்வப்னாதிப்பை ராகிங் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் மனதளவில் பாதிப்படைந்த மாணவர் கடந்த 9 ஆம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்திருக்கிறார்.

கடந்த 9 ஆம் தேதி காலை ஸ்வப்னாதிப் தனது தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 'நீங்க சீக்கிரம் வாருங்கள். உங்களிடம் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன' என்றும் பேசியுள்ளார். இந்த நிலையில் தான் அவர் அன்று இரவே விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டாம் ஆண்டு மாணவர் தீப்சேகர் தத்தா மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர் மனோதோஷ் கோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக இந்த விவகாரத்தில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சவுரப் சவுத்ரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். இவர் 2022ம் ஆண்டு கணிதத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவர். முன்னாள் மாணவர் சவுத்ரி சட்டவிரோதமாக விடுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.


Next Story