கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 March 2023 12:15 PM IST (Updated: 10 March 2023 12:16 PM IST)
t-max-icont-min-icon

தாவணகெரேயில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிக்கமகளூரு-

கல்லூரி மாணவி

தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா மாயகொண்டா அருகே பாசபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஹர்ஷிதா (வயது 18). இவர் ஹரிஹராவில் உள்ள அரசு கல்லூரியில், விடுதியில் தங்கி பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருடன் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள், ஹர்ஷிதாவை வெளியே செல்லலாம் என அழைத்துள்ளனர்.

ஆனால் அவர்களுடன் செல்ல மறுத்த ஹர்ஷிதா, தனக்கு வரும்போது பானிபூரி வாங்கி வரும்படி கூறி உள்ளார். இதையடுத்து மாணவிகள் வெளியே சென்றுவிட்டனர். இதனால் ஹர்ஷிதா மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில் திடீரென்று அறையின் கதவை பூட்டிக் கொண்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே வெளியே சென்றிருந்த சக மாணவிகள் ஹர்ஷிதாவுக்கு பானிபூரி வாங்கி வந்தனர். ஆனால் கதவு பூட்டப்பட்டு இருந்தது. வெகு நேரம் தட்டியும் ஹர்ஷிதா கதவை திறக்கவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, ஹர்ஷிதா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதனர். இதுபற்றி அறிந்ததும் விடுதி வார்டன் விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் ஹரிஹரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

காதல் விவகாரமா?

பின்னர் போலீசார் ஹர்ஷிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஹர்ஷிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஆனால் என்ன காரணத்திற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை.

எனினும் காதல் விவகாரத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து ஹரிஹரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story