தேர்வில் சினிமா பாடல்களை பதிலாக எழுதிய மாணவன் - ருசிகர அறிவுரை வழங்கி அதிரடி 'மார்க்' போட்ட ஆசிரியர்...!
இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் மற்றும் பிகே திரைப்படத்தின் பாடல்களை மாணவர் விடைத்தாளில் பதிலாக எழுதியுள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் மாணவர் எழுதிய பதிலும் அந்த பதிலுக்கு ஆசிரியை கொடுத்த மதிப்பெண்ணும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தேர்வில் கேள்விகளுக்கு விடை தெரியாத மாணவர் வழக்கமான பாணியான சினிமா பாடலை விடையாக எழுதியுள்ளார். அதன்படி இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் 'கிவ் மி சம் சன்ஷைன்' பாடல் மற்றும் அமீர்கான் நடித்த பிகே படத்தின் 'பஹ்வன் ஹை கஹன் ரி டு' ஆகிய பாடல் வரிகளை தேர்வில் கேட்ட கேள்விக்கு பதிலாக எழுதியுள்ளார்.
தேர்வுத்தாளை திருத்திய ஆசிரியர் சினிமா பாடல்களை தேர்வு பதிலாக எழுதிய மாணவரின் சூட்சமத்தை கண்டுபிடித்துள்ளார். பின்னர், விடைத்தாளின் மேலே தொடங்கி கீழே வரை சிவப்பு பேனாவால் ஒரு அழகிய கோடு போட்ட ஆசிரியர் ஒட்டுமொத்தமாக 3 கேள்விகளுக்கும் பூஜியம் (0) மதிப்பெண் வழங்கியுள்ளார்.
பின்னர், அந்த மாணவருக்கு அறிவுரை வழங்கும் வகையில் விடைத்தாளில் ஆசிரியர், 'நல்ல எண்ணம்... ஆனால் அது இங்கே நடக்காது' என்று எழுதியுள்ளார். மற்றொரு அறிவுரை வழங்கிய ஆசிரியர் விடைத்தாளின் மறுபக்கத்தில், 'நீங்கள் இன்னும் நிறைய விடைகளை (பாடல்களை) எழுதியிருக்க வேண்டும்' என்று கிண்டலாக எழுதியுள்ளார். ஒட்டுமொத்தமாக அந்த மாணவர் தேர்வில் பூஜியம் (0) மதிப்பெண் எடுத்துள்ளார். தேர்வில் பாடலை எழுதிய மாணவருக்கு ஆசிரியர் பூஜியம் மதிப்பெண் வழங்கி அறிவுரை வழங்கியது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.