திருக்குறள் அச்சிடப்பட்ட ராக்கி கயிறுகளை ராணுவ வீரர்களுக்காக தயாரித்த பள்ளி மாணவர்கள்!
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த பள்ளி மாணவர்கள், தாங்கள் தயாரித்த ராக்கி கயிறுகளை ஒப்படைத்தனர்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில், இன்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், தாங்கள் தயாரித்த ராக்கி கயிறுகளை ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்தனர்.
எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு மாணவர்கள் ராக்கி கயிறுகளை வழங்கியுள்ளனர்.
சகோதரத்துவத்தை போற்றும் வகையில், ரக்சாபந்தன் நாளில் ராக்கி கயிறு கட்டப்படுகிறது.
டெல்லி சென்று ராக்கி கயிறுகளை வழங்கிய கரூர் பரணிபார்க் குழும நிறுவனங்களின் முதல்வர் டாக்டர் ராமசுப்ரமணியன் கூறுகையில்:-
"மிகுந்த அன்புடனும் நன்றியுடனும், நம் நாட்டின் துணிச்சல் மிக்க வீரர்களுக்காக 1.5 லட்சம் ராக்கிகளைக் கொண்டு வந்துள்ளோம். அவற்றில் 75,000 ராக்கிகளில் திருக்குறள் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் 75,000 ராக்கிகள் கையால் செய்யப்பட்டவை ஆகும்" எனு கூறினார்.
இது குறித்து, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில்:-
"நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி என்ற முறையில், இந்த ராக்கிகளை நான் நேரடியாக முப்படைகளின் ராணுவ தளபதிகளுக்கும் வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன். இதன்மூலம் மாணவர்கள் கொண்டுவந்துள்ள ராக்கிகள் ராணுவ வீரர்களை முழுமையாக சென்றடையும்" என்று தெரிவித்தார்.